ஆர்எஸ்எஸ் பேரணி- அனுமதி மறுக்கும் உரிமை உண்டு- தலையிட கூடாது- உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு!
RSS அணிவகுப்பு தொடர்பான தமிழ்நாடு அரசு அப்பீல் மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.
டெல்லி: உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கும் உரிமை அரசுக்கு உண்டு என ஆர்.எஸ்.எஸ்.வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஆணித்தரமாக வாதாடியது. இவ்வழக்கு விசாரணை வரும் 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 24 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி மறுத்தும், 23 இடங்களில் சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பை நடத்திக் கொள்ள அனுமதித்தும் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

அந்த மனுக்கள் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் சத்யநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள், அணிவகுப்புக்கு அனுமதி அளித்த தனி நீதிபதி, பிறகு அந்த உத்தரவில் மாற்றம் செய்து சுற்றுச்சுவருக்குள் அணிவகுப்பு நடத்த உத்தரவிட்டது தவறு என்றும் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர். மேலும் இடைப்பட்ட காலத்தில் பல்வேறு அமைப்புகளுக்கு போராட்டங்கள் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 500 போராட்டங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதாகவும் புகார் தெரிவித்திருந்தனர்
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு, பிப்ரவரி 10-ந் தேதி பிறப்பித்த உத்தரவில், தனி நீதிபதி உத்தரவை ரத்துசெய்ததுடன், மூன்று தேதிகளை தேர்வு செய்து காவல்துறையிடம் விண்ணப்பிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கும், அவற்றில் ஒரு தேதியை தேர்வு செய்து அனுமதி அளிக்க காவல்துறைக்கும் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி பிப்ரவரி 12, 19, மார்ச் 5 தேதிகளை பரிந்துரை செய்து, பிப்ரவரி 11ஆம் தேதி தமிழக டிஜிபி மற்றும் அந்தந்த பகுதி காவல்துறை அதிகாரிகளிடம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் விண்ணப்பித்தனர். ஆனால் அவற்றில் முதல் இரண்டு தேதிகள் முடிந்துவிட்ட நிலையில், மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி சில நாட்களுக்கு முன்னர் ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அந்த நோட்டீசில் உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அளித்த விண்ணப்பித்தை ஏற்று, மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளிக்கும்படியும், அவ்வாறு அனுமதி அளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழ்நாடு அரசு. உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இது தொடர்பாக மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் போது, தமிழ்நாட்டின் 50 மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த இயக்கம் சார்பில் வாதிடப்பட்டது. என்னது 50 மாவட்டங்களா? என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் நகைச்சுவையாக கேட்டார். பின்னர், உளவுத்துறை தகவலின் அடிப்படையில் ஒரு அமைப்புக்கு அனுமதி மறுப்பது அரசின் உரிமை; கடமை. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வரும் 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications