35 ஆண்டு சிறை- இலங்கை தமிழர் ராஜன் விடுதலை விவகாரம்- தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி!
டெல்லி: இலங்கை தமிழ் அகதியானா ராஜன் முன்கூட்டியே விடுதலை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.
இலங்கையை சேர்ந்த தமிழரான ராஜன், குற்ற வழக்கு ஒன்றில் தண்டனை பெற்று சிறை தண்டனை அனுபவித்து வந்தார். 35 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என ராஜன் வழக்கு தொடர்ந்தார்.

2018-ம் ஆண்டு தம்மை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என ராஜன், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு , ராஜனின் மனுவை நிராகரித்தது. இது தொடர்பாக ராஜன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதி ஓஹா தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இந்த விசாரணையின் போது, முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்ற ராஜனின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அவரை உரிய முகாமுக்கு தமிழ்நாடு அரசு மாற்ற வேண்டும் என 3 வார காலக்கெடு விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜன வழக்கில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றவில்லை என ராஜன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாதது தொடர்பாக நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். இதனால் தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் வருத்தம் தெரிவித்தார்.
மேலும் ராஜனை உடனடியாக 24 மணிநேரத்தில் சிறப்பு முகாமுக்கு மாற்ற வேண்டும்; அப்படி செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர். இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications