ராஜீவ் காந்தியின் அஸ்ஸாம் ஒப்பந்தம்.. வங்கதேசத்தவருக்கு குடியுரிமை வழங்கும் சட்டப் பிரிவு 6A என்ன?
டெல்லி: அஸ்ஸாமில் குடியேறிய வங்கதேசம் நாட்டினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்த குடியுரிமைச் சட்டத்தின் 6A பிரிவு செல்லும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. குடியுரிமை சட்டத்தின் 6A பிரிவால் அஸ்ஸாமின் பூர்வகுடி மக்கள் சிறுபான்மையினராக்கப்படுவதாகவும் இதனால் 6A பிரிவு செல்லாது என அறிவிக்கவும் கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது.
1960-ம் ஆண்டுகளின் இறுதியில் பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்த கிழக்கு பாகிஸ்தானில் கிளர்ச்சிகள் வெடித்தன. பாகிஸ்தானின் ஒடுக்குமுறைக்கு எதிராக கிழக்கு பாகிஸ்தான் எனப்படும் இன்றைய வங்கதேசத்தில் ஏற்பட்ட புரட்சியால் பல லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து அண்டை நாடான இந்தியாவுக்குள் நுழைந்தனர். பின்னர் வங்கதேச விடுதலைக்காக 1971-ம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் இடையே யுத்தம் நடைபெற்றது. இந்த யுத்தத்தில் பாகிஸ்தானை சரணடைய வைத்து வங்கதேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கிக் கொடுத்தது இந்தியா.

இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச அகதிகள் மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் அதிகமாக குடியேறினர். அஸ்ஸாமில் வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்கள் மிகவும் அதிகமாக இருந்தது. 1980களில் அஸ்ஸாம் தனிநாடு கோரி ஆயுத கிளர்ச்சிகள் நடைபெற்றன. அப்போது வங்கதேசத்தில் இருந்து அஸ்ஸாமில் குடியேறியவர்கள் குறித்த பிரச்சனை முதன்மையானதாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து 1985-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் அஸ்ஸாம் மாணவர் அமைப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில் உருவானதுதான் அஸ்ஸாம் ஒப்பந்தம் -Assam Accord.
ராஜீவ் காந்தியின் அஸ்ஸாம் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு சரத்துதான் குடியுரிமை சட்டத்தின் 6A பிரிவு. அதாவது 1955-ம் ஆண்டு இந்திய குடியுரிமைச் சட்டத்தின் ஒரு பிரிவாக 6A உருவாக்கப்பட்டது. இதன்படி 1966-ம் ஆண்டு ஜனவரி
1-ந் தேதி முதல் 1971-ம் ஆண்டு மார்ச் 25 (1971-ம் ஆண்டு மார்ச் 25-ந் தேதி என்பது வங்கதேச விடுதலைப் போர் முடிவடைந்த நாள்) வரையிலான காலப் பகுதியில் இந்தியாவுக்குள் நுழைந்த இந்திய வம்சாவளி வங்கதேச நாட்டினருக்கு 'இந்திய குடியுரிமை' வழங்கப்படும். ஆனால் இப்படி குடியுரிமை பெற்றவர்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு இந்திய தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்பதாகும்.
ஆனாலும் வங்கதேசத்தில் இருந்து தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலானவர்கள் அஸ்ஸாமில் நுழைந்து போலி ஆவணங்கள் மூலம் இந்திய குடியுரிமை பெற்று தேர்தல்களில் வாக்களிக்கின்றனர்; இது அஸ்ஸாமின் பூர்வகுடி மக்களை சிறுபான்மையினராக்குகிறது; இந்திய குடிமக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கி இருக்கும் அடிப்படை உரிமைகளை இந்த 6A மீறுவதாகவும் மறுப்பதாகவும் இருக்கிறது. அரசியல் சாசனத்தின் 325, 326-ன் கீழாக அஸ்ஸாம் மக்களின் அரசியல் உரிமையையும் மறுக்கிறது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் 6A பிரிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மேலும் குடியுரிமைச் சட்டத்தின் 6A பிரிவு சட்டவிரோதமானது என அறிவிக்க வேண்டும்; அஸ்ஸாமில் குடியேறிய வங்கதேச நாட்டினர் உள்ளிட்ட பிற நாட்டவரை வெளியேற்ற வேண்டும்; எல்லைகளில் வேலி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்டவை மனுதாரர்களின் கோரிக்கை.
இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் இன்று டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இந்த அரசியல் சாசன பெஞ்ச்சில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சூர்ய காந்த், எம்எம் சுந்தரேஷ், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா இடம் பெற்றிருந்தனர். இவர்களில் நீதிபதி பர்திவாலா மட்டும் மாறுபட்ட தீர்ப்பளித்தார். இருப்பினும் பெரும்பான்மை அடிப்படையில் குடியுரிமை சட்டத்தின் 6A பிரிவு செல்லும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.












Click it and Unblock the Notifications