நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் அதிகாரப்பூர்வ 2 நாள் பயணமாகத் டெல்லி சென்றுள்ள சி.ஜோசப் விஜய், பிரதமர் உடனான 10 நிமிட பேச்சுவார்த்தைக்கு பின்பு, அடுத்தாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்துப் பேசுகிறார். இதற்காக டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் இருந்து கிளம்பியுள்ளார் விஜய்.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, மாநிலத்தின் நிதித் தேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக இந்த உயர்மட்டச் சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து புறப்பட்டு, மத்திய நிதியமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்று முதலமைச்சர் விஜய் இந்த ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய மத்திய நிதிப் பங்கீடு மற்றும் நிலுவைத் தொகைகளை விரைந்து வழங்கக் கோரி முதலமைச்சர் விஜய் விரிவான மனு ஒன்றை நிதியமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளார். இதேபோல் நிலுவை தொகை குறித்த கணக்கீடு பிரச்சனை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதை முதல்வர் விஜய் தலைமையில் தீர்க்கப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பையும் இந்த சந்திப்பு எழுப்பியுள்ளது.
குறிப்பாக, பெருநகரங்களின் உள்கட்டமைப்பு மேம்பாடு, மெட்ரோ ரயில் திட்ட நிதிப் பங்கீடு மற்றும் மாநிலத்தின் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை தடையின்றிச் செயல்படுத்துவதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் குறித்து இந்த ஆலோசனையில் விரிவாக விவாதிக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தின் கடன் வாங்கும் வரம்பை உயர்த்துவது மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பான விவகாரங்கள் குறித்தும் இந்த சந்திப்பில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வர் - நிதியமைச்சர் உடனான சந்திப்பு முடிந்த பின்பு முழு விபரமும் தெரிய வரும்.
தமிழகத்தின் பொருளாதாரத் தூண்களாக விளங்கும் ஜவுளி மற்றும் விவசாயத் துறைகளின் முக்கிய கோரிக்கைகளும் இந்த சந்திப்பில் முதன்மை பெறுகின்றன. குறிப்பாக, பருத்தி மீதான 11 சதவீத இறக்குமதி வரியை நீக்கக் கோரி, ஜவுளித் தொழில்துறையினர் சந்தித்து வரும் மூலப்பொருள் தட்டுப்பாட்டிற்குத் தீர்வு காண முதலமைச்சர் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், வரவிருக்கும் காரிஃப் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான உரங்களை மாநிலத்திற்குத் தங்குதடையின்றி முழுமையாக விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நிதியமைச்சரின் கவனத்திற்கு முதலமைச்சர் விஜய் கொண்டு செல்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் விஜயின் முதல்வர் சந்திப்பு 10-20 நிமிடத்திற்குள் முடிவடைந்தது பெரும் சர்ச்சையாக இருக்கும் வேளையில், தற்போது நிதியமைச்சரை சந்திக்கிறார். இந்த சந்திப்பு 20 நிமிடத்தை தாண்டுமா அல்லது இதுவும் குறுகிய சந்திப்பாக தான் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications