மசோதா அனுமதிக்கு காலநிர்ணயம்.. தமிழக ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்வி கேட்ட ஜனாதிபதி
டெல்லி: தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கில் மசோதாக்கள் மீது ஆளுநர் ஒரு மாதத்திலும், ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது ஜனாதிபதி 3 மாதத்திலும் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகள் எழுப்பி கூடுதல் விளக்கம் கேட்டுள்ளார். மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட பரபரப்பான 14 கேள்விகளை அவர் எழுப்பி உள்ளார்.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் மோதல் போக்கு உள்ளது. இந்நிலையில் தான் கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு ஒன்றை தொடர்ந்தது. அதாவது தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க கோரி இடையூறு ஏற்படுத்துகிறார் என்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
விசாரணையின் முடிவில் தமிழக அரசு அனுப்பி நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. அதுமட்டுமின்றி மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு ஒரு மாதம் வரையும், ஜனாதிபதிக்கு 3 மாதம் வரையும் கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு பிரச்சனையானது. இந்நிலையில் தான் தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரெளபதி முர்வு விளக்கம் கேட்டுள்ளார். மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால நிர்ணயம் செய்த விவகாரத்தில் 14 கேள்விகள் கேட்டு கூடுதல் விளக்கத்தை கோரியுள்ளார்.
மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசில் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகள் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக அரசியல் சான பிரிவு 143 (1) மூலம் ஜனாதிபதி திரெளபதி முர்மு வழியாக மத்திய அரசு உயர்நீதிமன்றத்தை அணுகி உள்ளது. இந்த விளக்கத்தை ஜனாதிபதி திரெளபதி முர்மு தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications