அமித்ஷா கைக்கு போன "ரிப்போர்ட்".. திமுகவுக்கு குறி.. காரணம் தோழமையா? புலி 'வாலை' பிடித்த கதையா போச்சே
டெல்லி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து பேசியுள்ள சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. இந்த சந்திப்புகள் வழக்கமானதாக இருந்தாலும் தற்போதைய தமிழக அரசியல் சூழலில் இவர்களுடைய சந்திப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. இது தொடர்பாக சில தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றதிலிருந்து அவருக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான உரசல்கள் பல சமயங்களில் மேலெழுந்து வருகிறது. இந்த உரசல்கள் சில தருணங்களில் சர்ச்சையாகவும் வெடித்திருக்கிறது. சனாதனத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பது, திராவிட மாடல் தொடர்பாக கேள்வியெழுப்புவது, திருக்குறளின் ஜி.யு.போப் மொழிபெயர்ப்பை விமர்சித்திருந்தது, தமிழ்நாடு-தமிழகம் சர்ச்சை, கார்ல் மார்க்ஸ் மீதான் விமர்சனம் என அவர் பேசிய விஷயங்கள் அனைத்திற்கும் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளுக்கிடைய எதிர்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோதல் போக்கின் உச்சம்தான் சட்டப்பேரவையிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறிய சம்பவம். இது ஒருபுறம் இருக்கையில் மறுபுறம் தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் திருப்பி அனுப்பி வருகிறார். இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ச்சியாக உரிமை போராட்டத்தை நடத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவில் இந்த போராட்டத்தை தமிழ்நாடு அரசு தீவிரமாக தொடர்கிறது.

மசோதா
அதாவது, ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் இளைஞர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே இதற்கு எதிராக தடை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ஆன்லைன் தடை சட்ட மசோதாவை தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 26ம் தேதி இயற்றியது. சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதா ஆளுநருக்கு ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் 1ம் தேதி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 131 நாட்களாக இது குறித்து பதில் ஏதும் சொல்லாமல் அவற்றை ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார். இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை நடத்தும் நிறுவனங்களின் பிரதிநிதிகளை ஆளுநர் ரவி நேரில் சந்தித்து பேசியிருந்தார்.

மீண்டும் நிறைவேற்றம்
இதையடுத்துதான் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பியிருந்தார். இது திமுக மற்றும் கூட்டணி கட்சிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து நேற்று(மார்ச் 23) சட்டப் பேரவையில் மீண்டும் இந்த ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் "மனித உயிர்களை பலிவாங்கும் ஆன்லைன் சூதாட்டங்களையை ஒழிப்பதில் இதயமுள்ளவர்கள் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது" என்று கூறியிருந்தார். பின்னர் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

அமித்ஷா
இந்நிலையில்தான் நேற்று மாலை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்புக்கு பின்னால் சில முக்கிய காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வந்திருக்கிறதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா வேலம்பட்டி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் (31) இரு தரப்பினருக்கிடையே நடந்த மோதலில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து திமுகவை கண்டித்து பாஜக போராட்டம் நடத்தியது.

கண்டனம்
ஆளுநர் தரப்பில் "ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம். பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர். உண்மையில், இது மிகவும் கவலைக்குரிய விஷயம்" என்று ட்வீட் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் பேட்மின்டன் உள் விளையாட்டு அரங்க திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் திருச்சி சிவா எம்.பியின் பெயர் விடுப்பட்டிருந்தாக கூறி அந்நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் கே.என்.நேருவுக்கு திருச்சி சிவா எம்பியின் ஆதரவாளர்கள் கருப்புக்கொடி காட்டினர்.

காவல் நிலையம்
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீட்டை தாக்கியுள்ளனர். இதற்கிடையில் கறுப்புக்கொடி காட்டியவர்களை திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை செய்து வந்தனர். அப்போது காவல் நிலையத்திற்குள் புகுந்த நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் ஆதரவாளர்களை தாக்கினர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் கடந்து 'தோழமை' கட்சியினரே இந்த சம்பவத்தை கண்டித்து அறிக்கை விட்டனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பாஜகவும் தன் பங்கிற்கு கடுமையாக குற்றம்சாட்டியது.

குற்ற அறிக்கை
அதேபோல ஓரிரு நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவப்படுகொலை சம்பவமும் தமிழ்நாட்டில் விவாதத்தை ஏற்படுத்தியது. ஆக இதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து டிஜிபி கொடுத்துள்ள அறிக்கையை கையோடு கொண்டு சென்று அமித்ஷாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்திருக்கிறார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தீவிரமடைந்துள்ளது என்பதை ஆளுநர் அமித்ஷாவுடன் உரையாடியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் நெருக்கடிக்கு எதிர்வினையாற்றவே ஆளுநர் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications