காவிரி: “நியாயமான கோரிக்கையை கேட்கல”.. சுப்ரீம் கோர்ட் நாளை விசாரிக்கும் நிலையில் தமிழக அரசு பரபர!
டெல்லி: தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கையை காவிரி மேலாண்மை ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என காவிரி வழக்கில் கர்நாடக அரசின் பதில் மனுவுக்கு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் விளக்க மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரியில் தண்ணீர் திறக்கும் விவகாரம் தொடர்பாக நீண்ட காலமாக தமிழ்நாடு - கர்நாடகா இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது. காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகா தண்ணீர் திறக்க மறுப்பதாக தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.

இதனிடையே இந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான பங்கீடை முறையாக திறந்துவிட உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், ஆகஸ்ட் மாதத்திற்கு தரவேண்டிய தண்ணீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது
இதற்கிடையே அண்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், விநாடிக்கு 24 ஆயிரம் கன அடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தியது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம், விநாடிக்கு 5000 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. ஆனால், அணைகளில் போதிய இருப்பு இல்லாத காரணத்தால் தண்ணீர் திறக்க இயலாது என கர்நாடக அரசு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.
இந்நிலையில் காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஆகஸ்ட் 11ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் உத்தரவை கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளது.

பற்றாக்குறை இருந்தபோதும் ஆகஸ்ட் 12 முதல் 27ஆம் தேதி வரை 13.328 டிஎம்சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு திறந்துவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் மழை இல்லாததால் அம்மாநில நகரங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
கர்நாடகத்திற்கு சாதகமாக காவிரி மேலாண்மை ஆணையம் அறிக்கை அளித்துள்ளது, தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் கர்நாடக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகா அரசின் பதில் மனுவுக்கு தமிழ்நாடு அரசு விளக்க மனு தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக அரசின் பதில் மனுவுக்கு, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள விளக்க மனுவில், நீர் பற்றாக்குறை இருப்பது அறிந்தும் உரிய உத்தரவை கர்நாடக அரசுக்கு காவிரி ஆணையம் பிறப்பிக்க மறுத்துள்ளது. 8.9 டிஎம்சி அளவிற்கு நீர் திறக்க உத்தரவிட்டிருக்க வேண்டிய நிலையில் அதை செய்ய காவிரி ஆணையம் தவறிவிட்டது எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 12 வரை 7,200 கன அடி நீரை திறக்க வேண்டும் என வலியுறுத்தியும், 5,000 கனஅடி நீரை திறக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் நியாயமான கோரிக்கையை காவிரி ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டியுள்ளது.
உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புக்கு எதிரானதாக கர்நாடகா அரசின் செயல்பாடு உள்ளது என தமிழ்நாடு அரசின் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில் தமிழ்நாடு அரசின் இந்த பதில் மனு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications