வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி- டெல்லியில் பாஜக பிரமுகர்- தமிழ்நாடு போலீஸ் இன்று வளைக்கும்?
டெல்லியில் பதுங்கி இருக்கும் பாஜக பிரசாந்த் உம்ராவ் இன்று சிக்க கூடும் என தெரிகிறது.
டெல்லி: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்பிய உ.பி. பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்வ் டெல்லிக்கு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து டெல்லியில் பதுங்கி இருக்கும் பிரசாந்த் உமாராவை கைது செய்ய தமிழ்நாடு தனிப்படை போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். உம்ராவை தமிழ்நாடு போலீசார் இன்று கைது செய்யக் கூடும் என கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர் என்கிற பொய்ச்செய்தி கடந்த சில நாட்களாக திட்டமிட்ட வதந்தியாக நாடு முழுவதும் பரப்பிவிடப்பட்டது. இத்தகைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பாஜகவினரே அதிகமாக பகிர்ந்து வந்தனர். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது.

பீகார் மாநில சட்டசபையிலும் இந்த பிரச்சனை வெடித்தது. ஆனால் தமிழ்நாட்டில் அப்படியான சம்பவங்களே நடைபெறவில்லை என தமிழ்நாடு அரசு, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை பீகார் சட்டசபையில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் அறிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசு குழுக்கள் இது தொடர்பாக ஆய்வும் ஆலோசனையும் நடத்தினர். இந்த ஆய்வுகளிலும் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்குதலுக்குள்ளாகவில்லை என்பது உறுதியானது.
மேலும் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக வட மாநில தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்து தமிழ்நாட்டில் இருந்து வட இந்திய மாநிலங்களுக்கு சென்றனர். இதனையும் பொய்யாக, வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என இன்னமும் சில கும்பல் வதந்தி பரப்பிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது தமிழ்நாடு போலீஸ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக சில வட இந்திய ஊடகங்கள் மீது வழக்குகள் போடப்பட்டுள்ளன.
மேலும் உபி மாநில பாஜக பிரமுகர் பிரசாந்த் உம்ராவ் என்பவர் மீதும் தூத்துக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் பாஜக பிரமுகர் பிரசாந்த், தற்போது டெல்லிக்கு தப்பி ஓடிவிட்டார். இதனையடுத்து அவரை கைது செய்ய தமிழ்நாடு போலீசார் டெல்லி விரைந்துள்ளனர். உம்ராவை இன்று தமிழ்நாடு போலீசார் கைது செய்யக் கூடும் என தெரிகிறது.
முன்னதாக இது தொடர்பாக பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பீகார் மாநிலத்திலிருந்து வந்து இங்கு தொழில் செய்து கொண்டிருக்கக்கூடிய, பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய, தங்களுடைய குடும்பத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழ்நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கக்கூடிய சிலரை எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தி அதன் மூலமாக அரசியல் லாபம் தேட நினைக்கக்கூடியவர்களுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லுகிறேன். இன்று காலையில்கூட பீகார் மாநிலத்தினுடைய முதலமைச்சர் நிதீஷ்குமார் நான் தொலைபேசியில் பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறேன். எனவே, எந்தக் காரணத்தைக் கொண்டும் எவ்வளவு பிளவை ஏற்படுத்த நினைத்தாலும் ஒருக்காலும் இந்தக் கூட்டணியை நீங்கள் பிளவுபடுத்திட முடியாது என்பதை மாத்திரம் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொல்லி, யார் சட்டம்-ஒழுங்கை கெடுக்கின்ற சூழ்நிலையில் ஈடுபட்டாலும் அவன் எந்தக் கொம்பனாக இருந்தாலும் அவனை இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம்! அடக்குவோம்! என எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications