சிமெண்ட் விலை குறையுமா.. இன்று கூடுகிறது 49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்.. எகிறும் எதிர்பார்ப்புகள்
சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பான் மசாலா மற்றும் குட்கா வணிகத்தில் ஏற்படும் வரி ஏய்ப்பை தடுப்பது குறித்து விவாதிக்கப்படும்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூட்டப்பட வேண்டும். அப்படி இருக்கையில், 47வது கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சண்டிகரில் நடைபெற்றது.
அதன் பின்னர் ஐந்தரை மாதங்கள் கழித்து கடந்த டிசம்பர் மாதம் 17ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் 48வது கூட்டம் நடைபெற்றது. தற்போது இதனையடுத்து 49வது கூட்டம் இன்று நடைபெறுகிறது.

ஆன்லைன் கேம்
இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது என்று சொல்லப்பட்டாலும், சில முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை கேசினோக்கள், ரேஸ் கோர்ஸ்கள் மற்றும் ஆன்லைன் கேமிங் ஆகியவற்றிற்கு வரிவிதிப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதற்கான அறிக்கையை மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சரவைக்குழு முன்வைத்தது. ஆனால் கோவா இதனை எதிர்த்ததால் இது தொடர்பா ஒருமித்த கருத்த எட்ட முடியவில்லை. எனவே இந்த முறை இது தொடர்பாக விவாதிக்கப்படும்.

ஷார்பனர்கள்
மேலும், பான் மசாலா மற்றும் மணல் சுரங்கம் போன்ற சில ஏய்ப்பு வாய்ப்புள்ள துறைகளில் திறன் அடிப்படையிலான வரிவிதிப்புக்கு இந்த 49வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் பரிந்துரைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த வரி ஏய்ப்பை தடுக்க தீர்ப்பாயங்கள் அமைப்பது குறித்தும் விவாதிக்கப்படும். அதேபோல பென்சில் ஷார்பனர்கள் மற்றும் தினை சார்ந்த சுகாதார பொருட்கள் போன்றவற்றிக்கு விலை குறைப்பது தொடர்பாக இக்கூட்டத்தில் அறிவிக்கப்படலாம். இது எல்லாவற்றுக்கும் மேலாக பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

ஒற்றைக்கருத்து
ஆனால், இது குறித்து மாநில அரசுகளுக்குள் ஒரு ஒற்றைக் கருத்து உடன்பாடு எட்டப்பட வேண்டும் என்று நதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளா். மேலும் சிமென்ட் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பது குறித்து ஆராய குழு அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. ஆனால் தற்போது வரை குழு அமைக்கப்படவில்லை. எனவே இந்த கூட்டத்தில் இக்குழு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம். பட்ஜெட்டுக்கு பிறகு கூடுவதால் இந்த கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது.

சிமெண்ட் விலை
சிமெண்ட் மீது விதிக்கப்பட்டுவரும், 28 சதவிகித ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று ரியல் எஸ்டேட் துறையினர் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.. இதுகுறித்து சமீபத்தில் நிர்மலா சீதாராமனிடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.. அதற்கு நிர்மலா சீதாராமன், "சிமெண்ட் மீதான வரியை குறைப்பது என்பது என்னிடம் இல்லை... ஜிஎஸ்டி கவுன்சில் தான் அதனை முடிவு செய்ய வேண்டும்... அனைத்து மாநில நிதியமைச்சர்களும் இதற்கு ஒப்புக்கொண்டால், சிமெண்ட் மீதான வரி விகிதம் நிச்சயம் குறைக்கப்படும்" என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்..

பிடிஆர்
எனவே இன்று நடைபெற உள்ள கூட்டத்தில், அதுதொடர்பாக விவாதம் நிறையவே நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மதுரையில் நடத்த வேண்டும் என்று கடந்த வருடமே தமிழக நிதியமைச்சர் பிடிஆர் கோரிக்கை விடுத்திருந்தார்.. எனவே, அதுகுறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.. மேலும், பல்வேறு பொருட்களின் மீது வரி விகிதங்களை குறைப்பது மற்றும் ஏற்றுவது குறித்து முக்கிய முடிவுகள் இன்றைய தினம் எடுக்கப்படும் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்றைய கூட்டம் அனைவரது கவனத்தையும் திருப்பி வருகிறது.












Click it and Unblock the Notifications