நெருக்கும் விவசாயிகள் போராட்டம்.. உர மானியத்தை அறிவித்தது மத்திய அரசு! அமைச்சரவை கூட்டத்தில் முடிவு
டெல்லி: மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் உரங்களுக்கான மானியத்தை மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கிறது.
இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் உரத்திற்கான மானியத்தை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அனுராக் தாக்கூர் இதனை கூறியுள்ளார். ஆண்டு தோறும் இரண்டு பருவங்களாக குறுவை சாகுபடி நடக்கிறது. இதில் முதல் பருவமான ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை விவசாயிகளுக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.

இதன் அடிப்படையில், உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கடந்த ஆண்டு என்ன விலையில் விவசாயிகள் உரங்களை வாங்கினார்களோ, அதே விலையில் இந்த ஆண்டும் வாங்கிக்கொள்ளலாம். கடந்த 2010ம் ஆண்டு, உரங்களுக்கு மானியங்கள் வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும், உர மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் மானியம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்லாது பல்வேறு திட்டங்களுக்கும் இன்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, வரும் 2025ம் ஆண்டுக்குள் அனைத்து மத்திய அரசு கட்டிடங்களிலும் முன்னுரிமை அடிப்படையில் சூரிய மின்தகடுகள் அமைக்கப்படும். மேலும், ஒரு கோடி வீடுகளில் பிரதமரின் சூரிய மின்சார சேமிப்பு திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
"பிரதமரின் சூரியோதய திட்டம் மூலம் ஒரு கோடி வீடுகளில் மாதத்துக்கு 300 யூனிட் அளவு மின்சாரம் உற்பத்தி செய்ய இயலும். இதனால், ஆண்டுக்கு ரூ.18,000 வரை அந்தக் குடும்பத்தினர் சேமிக்க முடியும்" என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். தற்போது இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
மேலும் இந்தியாவில் புலி, சிங்கம், சிறுத்தை போன்ற பெரிய பூனை இனங்களை பாதுகாக்கவும், அதை அதிகரிக்கவும் உருவாக்கப்பட்ட 'சர்வதேச பெரிய பூனைகள் கூட்டணி' திட்டத்தை விரிவாக்கம் செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. முதற்கட்டமாக கடந்த ஆண்டு இந்த திட்டத்திற்கு ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்படியாக ஐந்து ஆண்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். பின்னர் 5 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய பூனை இனங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர, தொழில்நுட்பத்தை பொறுத்த அளவில், நாட்டின் முதல் செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைப்பதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. இதன்படி டாடா மற்றும் தைவானின் பவர்சிப் நிறுவனம் இணைந்து இந்த தொழிற்சாலையை குஜராத் மாநிலத்தின் தோலேராவில் அமைக்கின்றன.
மத்திய அரசுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் நிலையில், உர மானியம், சூரிய ஒளி மின்சாரம் குறித்த பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications