வாக்காளர் பட்டியல் என்னாச்சு? கார்த்தி உட்பட 5 பேரின் கடிதத்திற்கு காங். தேர்தல் குழு தலைவர் பதில்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்புக்கான தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் குறித்து வெளிப்படைத் தன்மை தேவையென கார்த்திக் சிதம்பரம், சசிதரூர் உள்ளிட்ட 5 எம்பிக்கள் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
இதனையடுத்து மதுசூதன் இந்த 5 எம்பிக்களுக்கு பதில் கடிதம் எழுதியுள்ளார்.
இதில் சில முக்கிய முடிவுகளை தேர்தலையொட்டி கட்சித் தலைமை எடுத்துள்ளது என்று கூறியுள்ளார். குறிப்பாக தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

தேர்தல்
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகியதையடுத்து, கட்சிக்கு புதிய தலைவர் வேண்டும் எனக்கோரி கடந்த 2020ல் மூத்த தலைவர்கள் 23 பேர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால் கடிதம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி தலைவர்கள் சிலர் கட்சியைவிட்டு விலகத்தொடங்கினர். இது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தலைவர் பொறுப்புக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடிதம்
புதிய தலைவருக்கான தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17ம் தேதி நடைபெறும். மேலும், உட்கட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை வரும் செப்.22ம் தேதியும், செப். 24 வேட்புமனு தாக்கல் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய செப்.30ம் தேதி கடைசி நாள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அக்.17ம் தேதி வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை அக்.19ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் உட்கட்சி தேர்தலில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை வேண்டும் என வலியுறுத்தி, கார்த்திக் சிதம்பரம், சசிதரூர் உள்ளிட்ட 5 எம்பிக்கள் காங்கிரஸ் கமிட்டியின் மத்திய தேர்தல் குழுவின் தலைவர் மதுசூதன் மிஸ்ட்ரிக்கு கடிதம் எழுதியிருந்தனர்.

வெளிப்படைத்தன்மை
இந்த கடிதத்தில், உட்கட்சி தேர்தலில் வாக்களிக்கும் பிரதிநிதிகள் (வாக்காளர் பட்டியல்) பட்டியலை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இவ்வாறு வாக்காளர் பட்டியலை பகிரங்கமாக வெளியிடுவது தொடர்பாக CEAக்கு (கட்சியின் மத்திய தேர்தல் ஆணையம்) ஏதேனும் கவலைகள் இருந்தால், அதனை பாதுகாப்பாக பகிர்ந்துகொள்வது குறித்த நடைமுறையை உருவாக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை, வெளிப்படைத்தன்மை பற்றிய தங்கள் அக்கறை தொடரும் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

வாக்காளர் பட்டியல்
இந்த கடிதத்தையடுத்து காங்கிரஸ் தலைமை சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. குறிப்பாக, தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு வாக்காளர் பட்டியல் கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அதாவது வேட்புமனு தாக்கல் செய்பவர்களுக்கு 9,000 பிரதிநிதிகளின் பட்டியல் வழங்கப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த பட்டியல் செப்.20ம் தேதி முதல் கட்சியின் மத்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கிடைக்கும் என மதுசூதன் தெரிவித்துள்ளார்.

திருப்தி
இது தொடர்பாக இந்த 5 எம்பிக்களுக்கும் மதுசூதன் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதத்தில், "வேட்புமனு தாக்கல் செய்பவர்கள் அதனை கையெழுத்திட்டு தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்ததும் வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொள்ளலாம்" என்று கூறியுள்ளார். கட்சி தேர்தல் ஆணையத்தின் இந்த பதிலுக்கு சசிதரூர் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், இந்த பதிலில் தான் திருப்தியடைந்துள்ளதாகவும் அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications