ஜி.எஸ்.டி.யில் இருந்து தடுப்பூசி, மருந்துகள் விலக்கு அளிக்கப்படுமா? ஆராய்ந்து முடிவெடுக்க குழு அமைப்பு
டெல்லி: கொரோனா சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆராய மத்திய நிதியமைச்சகம் குழு அமைத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் நீடித்து வரும் நிலையில் நேற்று தலைநகர் டெல்லியில்43-வது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி(ஜி.எஸ்.டி) கூட்டம் நடந்து.
இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முதன்முதலாக இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்

பிடிஆர் பங்கேற்பு
.''கொரோனா தடுப்பூசிகள், ரெம்டெசிவர் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். கொரோனா காரணமாக 2021-22-ஆம் ஆண்டு மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு ஈடு செய்ய வேண்டும்' என்று டிஆர் பழனிவேல் தியாகராஜன் கோரிக்கை விடுத்திருந்தார்.

மாநிலங்கள் ஒருசேர கோரிக்கை
மேலும் மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை என்பதை மத்திய அரசு நினைவில் கொள்ள வேண்டும் என்றும் ஜிஎஸ்.டியை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என்றும் பிடிஆர் பேசியிருந்தார். தற்போதுள்ள கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தடுப்பூசிகள், ரெம்டெசிவர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு மருந்துகள், கொரோனா சிகிச்சைகான கருவிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களும் ஒருசேர கோரிக்கை விடுத்து இருந்தன.

8 பேர் கொண்ட குழு அமைப்பு
இந்த நிலையில் மாநிலங்கன் கோரிக்கையை ஏற்று, கொரோனா சிகிச்சை தொடர்பான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆராய குழு ஒன்றை மத்திய நிதியமைச்சகம் அமைத்துள்ளது. மேகாலயா முதல்வர் கொன்ராட் சங்மா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் 8 மாநிலங்களின் பிரநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.

கேரளா நிதி அமைச்சர்
அதாவது தெலுங்கானா, கேரளா நிதியமைச்சர்கள், உத்தரபிரதேசம், ஒடிசா மாநிலங்களின் நிதியமைச்சர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். மேலும் குஜராத், மகாராஷ்டிரா மாநில துணை முதல் அமைச்சர்களும் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு கொரோனா தடுப்பு மருந்துகள், கொரோனா சிகிச்சைகான கருவிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து முழுமையாக ஆய்வு செய்யும்.

விலக்கு அளிக்கப்படுமா?
பின்னர் இது தொடர்பான அறிக்கையை ஜூன் 8-ம் தேதிக்குள் மத்திய நிதி அமைச்சகத்திடம் ஒப்படைக்கும். மத்திய நிதி அமைச்சகம் குழு அமைத்துள்ளதால் கொரோனா தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா சிகிச்சை தொடர்பான கருவிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகம், மேற்கு வங்கத்துக்கு இடமில்லை
மத்திய நிதி அமைச்சகம் அமைத்த குழுவில் தமிழகம் சார்பில் எந்த பிரதிநிதியும் இடம் பெறவில்லை. இதே போல் மேற்கு வங்கத்தின் சார்பிலும் பிரதிநிதிகள் யாரும் குழுவில் இல்லை. மத்திய அரசு, மேற்கு வங்கம் இடையே தொடர்ந்து தகராறு நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று கூட்டத்தில் பங்கேற்ற தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மத்திய அரசை கடுமையாக சாடியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications