அரசுக்குதான் தெரியும் என நினைக்காதீங்க.. நாங்கள் சொல்வதையும் பாருங்க.. விளாசிய உச்சநீதிமன்றம்
டெல்லி: நீங்கள் அரசு என்பதால் எது சரி என்று உங்களுக்கு தெரியும் என்று நினைத்துவிடாதீர்கள் என்று உச்சநீதிமன்றம் காட்டமாக கூறியது.
நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் அமர்வு, கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ ஆக்ஸிஜன் வழங்குவது தொடர்பாக தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.
இருவாரங்கள் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு வாக்சின் பாலிசி தொடர்பாக, பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய அவகாசம் கோரியது. இதையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது.

சொலிசிட்டர் ஜெனரல்
அப்போது நீதிமன்றம் மத்திய அரசுக்கு கிடுக்கிப்பிடி கேள்விகளை முன்வைத்தது. மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா வாதிட்டார். அவரது வாதங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

மத்திய அரசு ஏன் வாங்கவில்லை
அப்போது நீதிபதிகள்.. "45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசியை முழுக்க மத்திய அரசு வாங்குகிறது. ஆனால் 45 வயதுக்கு கீழுள்ளோருக்கான வாக்சின்களை வாங்குவதில்லை. உற்பத்தியாளர்களிடமிருந்து 50 சதவீதத்தை மட்டும்தான் மாநில அரசு வாங்க முடிகிறது." என்று சுட்டிக் காட்டினர்.

விலை வித்தியாசம்
"மத்திய அரசை விட மாநில அரசுக்கு அதிக விலையில் வாக்சின் விற்பனை செய்யப்படுகிறது. மாநில அரசுகள் தங்களுக்குள் வாக்சின் வாங்க போட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும் என்று, நினைக்கிறீர்களா" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மத்திய அரசு அதிகாரம்
"மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும், உற்பத்தியாளர்கள் வேறுபட்ட விலை நிர்ணயம் செய்ய முடியாது. விலையை நிர்ணயிக்க மத்திய அரசுக்கு அதிகாரங்கள் உள்ளன. வெவ்வேறு விலைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை ஏன் தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் விட வேண்டும்? " என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

சரி என்று உங்களுக்கு தெரியுமா
"நீங்கள் அரசாக இருப்பதால், எது சரி என்று உங்களுக்குத் தெரியும் என்று எங்களிடம் சொல்ல முடியாது. இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண சட்டத்திற்கு வலுவான கரங்கள் உள்ளன. நீதிமன்றமாக நாங்கள் சில சிக்கல்களை குறிப்பிட்டுச் சொல்கிறோம் என்றால், நீங்கள் அதை கவனிக்க வேண்டும். டிஜிட்டல் கல்வியறிவு என்பது நம் நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாகும். உங்கள் பிரமாணப் பத்திரத்தை நாங்கள் பார்க்க விரும்பவில்லை, உங்கள் தடுப்பூசி கொள்கை ஆவணத்தை எங்களுக்குக் காட்டுங்கள் " என்று உச்ச நீதிமன்றம் அழுத்தம் திருத்தமாக கூறியது.












Click it and Unblock the Notifications