INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம்
டெல்லி: இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தை திமுக புறக்கணித்துள்ள நிலையில், விசிக, இடதுசாரி கட்சிகள் பங்கேற்றிருந்தன. இதில் பேசிய திருமாவளவன், காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர், திமுக கூட்டணியிலிருந்த கட்சிகள் தவெக பக்கம் சாய்ந்திருக்கின்றன. இதில் காங்கிரஸின் செயல்பாடுதான் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

திமுகவின் அதிருப்தி
அதாவது கூட்டணியிலிருந்த மற்ற கட்சிகள் எல்லாம் திமுக தலைமையை கலந்து ஆலோசித்து பின்னர்தான் கூட்டணி முறிவை அறிவித்தன. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைமை அப்படி எந்த ஆலோசனையையும் மேற்கொள்ளவில்லை. இதனால் திமுக கடும் அதிருப்பதியடைந்தது. எனவேதான் இன்று டெல்லியில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை.
இப்படி இருக்கையில் இந்த கூட்டத்தில் விசிக சார்பில் பங்கேற்றிருந்த திருமாவளவன் காங்கிரஸின் தன்னிச்சையான செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,
கல்வித்துறை சீரழிவு
"பாஜக அரசு கல்வித்துறையைக் கையாண்ட விதம் இந்திய மாணவர்களின் எதிர்காலத்தைப் பெரும் ஆபத்தில் தள்ளியுள்ளது. நாடு முழுவதும் அடுத்தடுத்து நடந்த வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் காரணமாகப் பல முக்கியத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பொறுப்பேற்க வேண்டிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், எவ்விதப் பதிலும் கூறாமல் மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது.
பொருளாதார நெருக்கடி
நரேந்திர மோடி அரசின் தவறான பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைகளால் நாடு கடுமையான நிதி நெருக்கடியை நோக்கித் தள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் அந்நியச் செலாவணி இருப்பு பெரும் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. இதற்கு முறையான தீர்வைக் கூறாமல், மக்களை வயிற்றைக் கட்டிக்கொள்ளச் சொல்லும் போக்கையே பிரதமர் கடைப்பிடிக்கிறார். கோவிட்-19 பேரிடரின் போது காட்டிய அதே அலட்சியத்தை இப்போதும் காட்டுவதால், கோடிக்கணக்கான இந்தியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்குக் கடுமையான கண்டனம்
அதேபோல, சமீபத்திய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி கையாண்ட தேர்தல் வியூகம் 'INDIA' கூட்டணியின் வலுவான தூண்களாக இருக்கும் பிராந்தியக் கட்சிகளைப் பலவீனப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் எடுத்த தன்னிச்சையான முடிவுகள் சிபிஎம் (CPM), திரிணாமுல் காங்கிரஸ் (TMC) மற்றும் திமுக (DMK) ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு உகந்தது அல்ல என்பதால், காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார். காங்கிரஸின் செயல்பாட்டுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications