அடுத்த போராட்டத்திற்கு ரெடி.. ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடும் விவசாயிகள்! டெல்லியில் இன்று மகாபஞ்சாயத்து
டெல்லி: விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை உள்ளிட்டவற்றை கேட்டு விவசாயிகள் போராட்டத்தை தொடங்கிய நிலையில், இன்று டெல்லியில் மகாபஞ்சாயத்து நடக்கிறது.
விவசாயிகள், தங்களின் நீண்ட கால கோரிக்கையான 'விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை(MSP)' சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று விவசாயிகள் மீண்டும் டெல்லி நோக்கி அணி திரண்டுள்ளனர்.

வேளாண் கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், மின் கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும், 2021 லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013ஐ மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், மற்றும் 2020-21ல் முந்தைய போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளையும் விவசாயிகள் எழுப்பியுள்ளனர்.
இவர்கள் டெல்லி நோக்கி வருவதை தடுக்க முள் வேலிகள், சிமெண்ட் தடுப்புகள், தரையில் ஆணிகளை பதித்து வைத்தல் என பல்வேறு தடைகளை காவல்துறையும், துணை ராணுவமும் ஏற்படுத்தி வருகிறது. பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து டெல்லியை இணைக்கும் அனைத்து சாலைகளிலும் இந்த தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
இருப்பினும் இந்த தடைகளை தாண்டி விவசாயிகள் டெல்லி நோக்கி அணி வகுத்து வருகின்றனர். இதனை தடுக்க ஏற்கெனவே, மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இப்படியாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்நிலையில் இன்று டெல்லியில் மகாபஞ்சாயத்து நடைபெறும் என விவசாயிகள் அறிவித்துள்ளனர். மகாபஞ்சாயத்து என்பது அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஒன்றுகூடி பேசுவதாகும். அந்த வகையில் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறும் மகாபஞ்சாயத்தில் சுமார் 50,000க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா (SKM) அகில இந்திய கிசான் மஸ்தூர் உள்ளிட்ட விவசாய அமைப்புகள் கூறியுள்ளன.
மகாபஞ்சாயத்து காரணமாக டெல்லியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, காவல்துறை போக்குவரத்து மாற்றம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளது. பைக், காரில் செல்வதை காட்டிலும், மெட்ரோ ரயில் போன்ற பொதுப்போக்குவரத்தில் பயணித்தால் போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications