ஹெல்மெட் இன்றி பைக் பேரணி.. பாஜக எம்பியை விடாத டெல்லி போலீஸ்.. அதிரடியாக ரூ.41000 அபராதம் விதிப்பு!
டெல்லி: இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் திரங்கா பைக் பேரணியில் ஹெல்மெட் அணியாமல் பங்கேற்ற பாஜகவின் எம்பி மனோஜ் திவாரிக்கு டெல்லி போலீசார் அதிரடியாக ரூ.41 ஆயிரம் அபராதம் விதித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் வரும் 15 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
குறிப்பாக கடந்த ஓராண்டாக 'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் 'ஹர் கர் திரங்கா'(இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்தது.

பிரதமர் மோடி வேண்டுகோள்
அதன்படி ஒவ்வொருவரும் தங்களின் வீடுகளில் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி வரை தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சமூக வலைதள பக்கங்களில் முகப்பு போட்டோவாக தேசியக்கொடியை வைக்க பிரதமர் மோடி கூறியுள்ளார். அதன்படி ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி முதல் பிரதமர் மோடி உள்பட ஏராளமானவர்கள் தங்களின் சமூக வலைதள பக்கங்களின் முகப்பு படத்தை தேசியக்கொடியாக மாற்றியுள்ளார்.

டெல்லியில் பைக் பேரணி
மேலும் ‛ஹர் கர் திரங்கா' என்ற பெயரில் நாட்டின் சுதந்திரத்துக்கு பாடுபட்ட தியாகிகளை நினைவுக்கூறும் வகையில் நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜகவினர் பேரணி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று டெல்லியில் பைக் பேரணி நடந்தது. டெல்லி செங்கோட்டையில் இருந்து நாடாளுமன்ற வளாகம் வரை இந்த பேரணி சென்றது.

ஹெல்மெட் அணியாததால் விமர்சனம்
இந்த பேரணியானது பாஜகவின் எம்பியும், டெல்லி தலைவருமான மனோஜ் திவாரி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இந்த பேரணி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவ துவங்கின.அப்போது பைக் பேரணியில் பங்கேற்ற பாஜகவின் எம்பி மனோஜ் திவாரி ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியதை பலர் விமர்சனம் செய்தனர்.

ரூ.41 ஆயிரம் அபராதம்
மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி போலீசாரிடம் சமூக வலைதளங்கள் மூலம் புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதன் தொடர்ச்சியாக தற்போது டெல்லி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி மனோஜ் திவாரிக்கு ரூ.21 ஆயிரம், அவர் ஓட்டிய மோட்டார் சைக்கிளின் உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் என மொத்தம் ரூ.41 ஆயிரம் வரை அபராதம் விதித்துள்ளனர். இதுபற்றி டெல்லி போலீசின் செய்தி தொடர்பாளாக சுமன் நல்வா கூறுகையில், ‛‛போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளோம்'' என்றார்.

எதற்கெல்லாம் அபராதம்?
இதில் பாஜகவின் எம்பி மனோஜ் திவாரிக்கு மொத்தம் 4 வகையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படிி ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதற்கு ரூ.1000, லைசென்ஸ் இன்றி பைக் ஓட்டியதற்காக ரூ.5 ஆயிரம், பியூசிசி(மாசுகட்டுப்பாட்டு சான்று) இல்லாததால் ரூ.10 ஆயிரம், ஆர்சி விதிமீறலுக்க ரூ.5 ஆயிரம் என மொத்தம் ரூ.21 ஆயிரத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பைக் உரிமையாருக்கு 3 வகைககளில் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி லைசென்ஸ் இல்லாதவரிடம் பைக் ஓட்ட கொடுத்ததாக ரூ.5000, பியூசிசி இல்லாததற்கு ரூ.10,000, எச்எஸ்ஆர்பி பிளேட்டுக்காக ரூ.5 ஆயிரம் என மொத்தம் 20000 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

எம்பி ட்விட்டரில் கூறியது என்ன?
இதையடுத்து அபராதம் செலுத்துவதாக மனோஜ் திவாரி கூறியுள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்‛‛இன்று ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்கு மன்னிக்கவும். இதற்காக டெல்லி போலீசார் விதித்த அபராதத்தை செலுத்துகிறேன். ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களை யாரும் ஓட்ட வேண்டாம். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கண்டிப்பாக தேவை'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications