நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆப்சென்ட் - பதாகைகளுடன் தமிழக காங். எம்.பிக்கள் போராட்டம்!
டெல்லி: நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி வருகை தராமல் ஆப்சென்ட் ஆனதை சுட்டிக்காட்டி தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் மாணிக்கம் தாகூர், விஜய் வசந்த் ஆகியோர் பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. நடப்பு கூட்டத் தொடரின் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும் இரு சபைகளின் நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.

இரு சபைகள் பாதிப்பு
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை சம்பவம், 12 ராஜ்யசபா எம்.பிக்கள் சஸ்பெண்ட், தேர்தல் சீர்திருத்த மசோதா, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது உள்ளிட்டவை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஒவ்வொரு நாளும் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர். ஆனால் எதிர்க்கட்சி எம்.பிக்களின் அமளியால் விவாதங்கள் நடைபெறாமல் முக்கிய மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படுகின்றன.

எம்.பிக்கல் போராட்டம்
இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், மத்திய அரசு விவாதங்களை எதிர்கொள்ள அச்சப்படுகிறது. மத்திய அரசு ஜனநாயக விழுமியங்களை கடைபிடிக்கவில்லை என்று குற்றம்சாட்டி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் ஒவ்வொரு பிரச்சனைக்காகவும் கட்சிகளின் எம்.பி.க்கள் பதாகைகள் ஏந்தி போராடுவதும் வழக்கமாக உள்ளது.

மோடிக்கு எதிராக போராட்டம்
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் எம்.பிக்களான மாண்ணிக்கம் தாகூர், விஜய் வசந்த் இருவரும் பிரதமர் மோடிக்கு எதிராக நேற்று பதாகைகளுடன் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்துக்கு பிரதமர் வந்த நாட்கள், ஆப்சென்ட் ஆன நாட்கள் ஆகியவற்றை குறிப்பிடும் பதாகைகளை இருவரும் கைகளை ஏந்தி இருந்தனர். நவம்பர் 29-ந் தேதி மட்டும் பிரதமர் மோடி நாடாளுமன்றத்துக்கு வருகை தந்ததாகவும் இதர நாட்கள் அவர் வரவில்லை என்றும் அப்பதாகைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மோடி சுற்று பயணம்
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல்கள் அடுத்த சில மாதங்களில் நடைபெற உள்ளன. இதனால் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இடைவிடாமல் தொடங்கி வைத்து வருகிறார். இதனை விமர்சிக்கும் வகையில் தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் இருவரும் பிரதமர் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தி இருந்தனர்.


Click it and Unblock the Notifications
