மேகதாது விவகாரம்: ''நமக்கு சாதகமான பதில் வரும்''.. மத்திய அமைச்சரை சந்தித்தபின் துரைமுருகன் பேட்டி!
டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதிக்காது என்று ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சர் துரைமுருகன் கூறினார். காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது.
Recommended Video
விரைவில் மேகதாது அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார். இதற்கு தமிழ்நாடு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.
கர்நாடகாவின் இந்த செயல் இரு மாநில நல்லுறவுக்கும் நல்லதல்ல என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். ஆனாலும் கர்நாடக முதல்வர் எடியூரப்பா, இதனால் தமிழ்நாட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பிடிவாதமாக இருக்கிறார்.

துரைமுருகன் சந்திப்பு
இந்த நிலையில் மேகதாது அணை இவ்விவகாரம் குறித்து பேசுவதற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் மத்திய ஜலசக்தி துறை மந்திரி ஷெகாவத்தை சந்தித்துப் பேசினார். அப்போது மேகதாது அணை விவகாரம், தென் பெண்ணையாற்றில் கர்நாகா புதிய அணை காட்டியது குறித்து அவரிடம் எடுத்துக் கூறினார்.

தெரிந்து வைத்துள்ளார்
இந்த சந்திப்புக்கு பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:- ஒன்றிய அமைச்சர் ஷெகாவத் உடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்து. நான் கூறுவதற்கு முன்பே இந்த விவகாரத்தை பற்றி அவர் நன்கு தெரிந்து வைத்துள்ளார். உச்சநீதிமன்ற உத்தரவின்படி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய நீர் திறக்க வேண்டும்.

கர்நாடகா செய்தது தவறு
ஆனால் கர்நாடக அரசு இதனை சரிவர செய்யவில்லை. இது குறித்து ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தினோம். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை மத்திய அரசு தடுக்க வேண்டும். என்றும் தெரிவித்தோம். தமிழக அரசிடம் ஒப்புதல் பெறாமல் கர்நாடகா மத்திய அரசிடம் அனுமதி பெற்றது தவறு.

ஷெகாவத் உறுதி
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தரமாக ஒரு தலைவரை நியமிக்க கோரியுள்ளோம். தமிழகம்-கர்நாடகாவிடம் கலந்து பேசிதான் முடிவு எடுப்போம் என ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். கர்நாடகா ஒப்புதல் வாங்கிவிட்டதால் மட்டும் மேகதாது அணை கட்டிவிட முடியாது ஷெகாவத் கூறினார். இதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்காது என்று அமைச்சர் என்னிடம் கூறினார். காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கும்படி வலியுறுத்தினேன் என்று துரைமுருகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications