40,000 பேர்..காங்கிரஸால் நாளை குலுங்கும் டெல்லி.. ராகுல் யாத்திரையில் கமல் உள்பட பல தலைகள் பங்கேற்பு
டெல்லி: ராகுல் காந்தியின் பாரத் ஜேடோ யாத்திரை நாளை தலைநகர் டெல்லியில் நுழைய உள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களை சேர்த்து மொத்தம் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பங்கேற்க உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கத்திலும், 2024 நாடாளுமன்ற தேர்தலில் செல்வாக்கை மீட்கும் வகையிலும் ராகுல் காந்தி ‛பாரத் ஜோடோ யாத்திரை' மேற்கொண்டு வருகிறார்.
இந்த யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடைபெற உள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரை
கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கன்னியாகுமரியில் பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல் காந்தி தொடங்கினார். தற்போது இந்த யாத்திரை 100 நாட்களை தாண்டிய யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தானை கடந்து இன்று அரியானாவில் நடக்கிறது.

நாளை டெல்லியில் யாத்திரை
இந்த யாத்திரை நாளை காலை டெல்லியில் நுழைய உள்ளது. அதன்படி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நாளை காலை 6 மணிக்கு அரியானா மாநிலத்தில் இருந்து பதர்பூர் எல்லை வழியாக தலைநகர் டெல்லியை அடைய உள்ளது. அதன்பிறகு மதுரா ரோடு ஜாகீர் உசேன் மார்க், இந்தியா கேட், திலக் மார்க், ஐடிஓ வழியாக செங்கோட்டை வழியாக ஆசிரமத்தை யாத்திரை அடைகிறது. அங்கு யாத்திரையின் முதல் பகுதி முடிவடைகிறது.

தலைவர்களுக்கு மரியாதை
இதையடுத்து ஆசிரமத்தில் இருந்து நேதாஜி சுபாஷ் மார்க் வழியாக ராஜ்காட்டுக்கு ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் சென்று தேச தலைவர்களுக்கு மரியாதை செலுத்த உள்ளனர். இந்த யாத்திரையில் நாளை காங்கிரஸ் கட்சியின் எம்பி, எம்எல்ஏக்கள், முதல்வர்கள், உள்பட பல மாநில, மாவட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

கமல் உள்பட 40 ஆயிரம் பேர் பங்கேற்பு
இதுதவிர தலைநகரில் நடக்கும் யாத்திரையில் பங்கேற்கும்படி பல அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் காங்கிரசுடன் கூட்டணியில் உள்ள கட்சிகள், மற்றும் பாஜகவுக்கு எதிரான சித்தாந்தங்கள் கொண்ட கட்சிகளின் தலைவர்கள் நாளைய பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர். மேலும் மொத்தம் 40 ஆயிரம் பேர் வரை கலந்து கொள்ள ஆர்வம் தெரிவித்து விண்ணப்பம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

போக்குவரத்து மாற்றம்
இந்த யாத்திரையால் டெல்லியில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட உள்ளது. இதனால் யாத்திரைக்கு ரிங்ரோட்டை பயன்படுத்துமாறு போக்குவரத்து போலீசார் காங்கிரஸ் தலைவர்களிடம் வலியுறுத்தி உள்ளனர். மேலும் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.

நேரம் என்ன?
இதுபற்றி டெல்லி காங்கிரஸ் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அனில் பரத்வாஜ் கூறுகையில், ‛‛டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கட்சியின் யாத்திரையில் மொத்தம் 40 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். பரத்பூர் எல்லையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை காலை 6 மணிக்கு நுழைகிறது. அதன்பிறகு காலை 10 மணிக்கு ஆசிரமத்தை அடைகிறது. அங்கிருந்து 1 மணிக்கு புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு ராஜ்காட்டுக்கு யாத்திரை செல்ல உள்ளது'' என்றார்.

பாஜக எதிர்ப்பு நடுவே..
சீனாவில் கொரோனா பாதிப்பை அதிகரித்து வரும் ஓமிக்ரான் உருமாறிய பிஎப் 7 வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதால் ராகுல் காந்தி தனது யாத்திரையை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் நாளை டெல்லியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுடன் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற உள்ளது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications