“SIR பணிகளில் ஏகப்பட்ட குளறுபடி நடக்குது”.. உச்சநீதிமன்ற கதவைத் தட்டிய தவெக!
டெல்லி: தமிழ்நாட்டில் SIR நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. SIR பணிகளில் பல்வேறு குளறுபடிகள் நடைபெற்று வருவதாக மனுவில் தவெக குற்றம்சாட்டியுள்ளது.
தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம். டிசம்பர் 4 ஆம் தேதி வரை இந்தப் பணிகள் நடைபெறும். எஸ்.ஐ.ஆர் பணிகளில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முன்னதாக, தவெக தலைவர் விஜய், SIR நடவடிக்கை தொடர்பாக வீடியோ வெளியிட்டிருந்தார். அதில் பேசிய விஜய், "இந்திய அரசியல் சாசனம், தமிழக மக்கள் அனைவருக்கும் கொடுத்துள்ள உரிமையில் மிகவும் முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிரோடு இருக்கிறான் என்பதற்கு அடையாளமாக இருப்பதில் அவனது ஓட்டுரிமை மிகவும் முக்கியம். அதனால்தான், வாக்குரிமை என்பது நமது உரிமை மட்டுமல்ல, அது நமது வாழ்வும்கூட.
இதை நான் முதலில் கேள்விப்பட்டபோது எனக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது. நான் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் நம் யாருக்குமே ஓட்டுப்போடும் உரிமையே இல்லை என்று சொன்னால் நம்புவீர்களா? நான், நீங்கள் உட்பட யாருக்குமே அது இல்லை. நான் பயமுறுத்துகிறேன் என்று நினைக்காதீர்கள். அதுதான் உண்மையும்கூட. கொஞ்சம் ஏமாந்தால்கூட லட்சக்கணக்கானோருக்கு ஓட்டுப் போடும் உரிமையே இல்லாத ஒரு நிலை வந்தாலும் வரலாம்.
இதற்கு முக்கிய காரணம் அந்த எஸ்ஐஆர். இந்த எஸ்ஐஆர் தமிழ்நாட்டில் எப்படி வேலை செய்யப்போகிறது? கடந்த ஜனவரியில் எடுத்த கணக்கெடுப்பில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்குமே தற்போது ஓட்டு போடும் உரிமை இல்லை.
பிஎல்ஓ என சொல்லப்படும் வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடு வீடாகச் சென்று படிவத்தைக் கொடுப்பார், நாம் அதை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அதை பரிசீலித்து, அனைத்தும் சரியாக உள்ளதாக என்பதை உறுதிப்படுத்திய பிறகு வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அந்த வாக்காளர் பட்டியலில் நமது பெயர் இருக்க வேண்டும். அப்போதுதான் நம்மால் ஓட்டு போட முடியும்.
அந்த புது பட்டியல் வரும் வரை நாம் வாக்காளரா என்பதை உறுதி செய்யவே முடியாது. ஒருவேளை அந்த புது பட்டியலில் நமது பெயர் இல்லை என்றால், நமது பெயரைச் சேர்க்க தனியாக ஒரு நடைமுறை உள்ளது. இதுபோன்று நிறைய சிரமங்கள், குழப்பங்கள் இருப்பதால் மக்களுக்கு இதன்மீது ஒரு குழப்பம் இருக்கிறது. இது என்ன சரிபார்க்கும் நடைமுறையா, இல்லை மறைமுக மறு பதிவா, இல்லை இது ஒரு புதிய பதிவுதானா என்பது போன்ற நிறைய குழப்பங்கள் இருக்கின்றன.
இந்த எஸ்ஐஆர் மீது சில சந்தேகங்கள் இருக்கின்றன. அது என்னவென்றால், இந்த 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களுக்கும் ஒரே மாதத்தில் எவ்வாறு படிவம் சென்று சேரும்? ஒருவேளை அவர்கள் வரும்போது நீங்கள் வீட்டை பூட்டிக்கொண்டு வேலைக்குச் சென்றுவிட்டால் என்ன செய்வது? அவர்கள் வருவார்கள் என்பதற்காக வேலையை விட்டுவிட்டு வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டுமா?
இதில் அதிகம் பாதிக்கப்படப் போவது உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்குப் போகும் பெண்கள். இவர்களுக்கு சரியான பதிலை சொல்லப் போவது யார்? ஒரு நியாயமான எஸ்ஐஆர் எப்படி நடத்த வேண்டும். இறந்து போனவர்களை பட்டியலில் இருந்து நீக்க வேண்டும், போலி வாக்காளர்கள் இருந்தால் அவர்களை நீக்க வேண்டும், ஏற்கெனவே வாக்குரிமை இருப்பவர்களுக்கு எதற்காக இந்த பதிவு என்ற பெயரில் இவ்வளவு குழப்பங்கள்.
புதிய வாக்காளர்கள் மற்றும் வாக்குரிமை இல்லாதவர்களை மட்டும் சேர்த்தால் போதாதா? சமீபத்தில் 2021, 2024ல் நடந்த தேர்தலில் எப்படி எல்லோரும் வாக்களித்தோம். அதில் வாக்களித்தவர்களும்கூட புதிதாக பதிய வேண்டும் என்றால், ஏன் இந்த குழப்பம் என்பதுதான் எங்கள் கேள்வி. அதற்காகத்தான் நாங்கள் எஸ்ஐஆர்-ஐ எதிர்க்கிறோம்.
தற்போது புதிதாக புகார்கள் வரத் தொடங்கி உள்ளன. முக்கியமாக நமது தவெக தோழர்களுக்கு அந்த படிவம் கிடைப்பதில்லை, கொடுக்க மறுக்கிறார்கள் என்பதுதான் அந்த புகார். இதை யார் செய்கிறார்கள் என்பதை நான்தான் சொல்லி தெரிய வேண்டும் என்பதில்லை. தற்போது ஆட்சியில் இருப்பவர்கள், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கக்கூடிய சிலர்தான் இதைச் செய்கிறார்கள்.
தவெக தொண்டர்கள் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எல்லோருக்கும் அந்த படிவம் சென்று சேர வேண்டும். இதில் மிகவும் உறுதியாக இருங்கள். அதையும் மீறி உங்களுக்கு படிவம் கிடைக்கவில்லை என்றால், ஆன்லைனில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு, பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கு இவ்விஷயத்தில் உதவுங்கள். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பழகியவர்கள், பழகாதாவர்கள் என அனைவருக்கும் உதவுங்கள்." என்று விஜய் அறிவுறுத்தி இருந்தார்.












Click it and Unblock the Notifications