பிரிட்டனில் கல்வி.. ஆனா வேலை கிடைக்கல! புலம்பெயர்ந்த இந்திய மாணவர்கள்.. பிரச்சனை இதுதான்!
டெல்லி: உயர் கல்விக்காக பிரிட்டனில் படிக்க செல்லும் இந்திய மாணவர்களால், அங்கேயே வேலை வாய்ப்பை பெற முடிவதில்லை. 100 பேரில் 20 பேர் வரை மட்டுமே பிரிட்டனில் வேலை கிடைத்து செட்டில் ஆகிறார்கள். ஏன் 80 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்பது குறித்த கேள்விக்கு விரிவுரையாளர் ஒருவர் ரெட்டிட் சமூக ஊடகத்தில் பதிலளித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
பிரிட்டனில் வேலை சும்மா கிடைத்துவிடாது என்று கூறியுள்ள விரிவுரையாளர், டிகிரி மட்டுமே வேலை கிடைப்பதற்கு போதுமானதாக இருக்காது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

1. தொடர்பு தடைகள் (Communication Barriers)
2. கற்றல் ஈடுபாடு குறைவு (Lack of Engagement)
3. பகுதிநேர வேலைக்கு மிகுந்த முக்கியத்துவம் (Overemphasis on Part-time Work)
இந்த 3 விஷயங்கள்தான் இந்திய மாணவர்களுக்கு பிரிட்டனில் வேலை கிடைக்காமல் போவதற்கு முக்கிய காரணம் என விரிவுரையாளர் கூறுகிறார். முதல் விஷயத்தை பொறுத்த அளவில், இந்திய மாணவர்கள் சரளமாக ஆங்கிலத்தில் உரையாடுவதில் சிக்கலை எதிர்கொண்டிருக்கின்றனர். பொதுவெளியில் அவர்களால் உரையாட முடியவில்லை. எனவே, மற்றொருவரிடம் தொடர்புகொள்ளுதலில் பிரச்சனை இருக்கிறது என்று கூறுகிறார்.
இரண்டாவது விஷயத்தை பொறுத்த அளவில், பிரிட்டனில் படித்தால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், இங்கு வந்து படிக்கும்போது, கல்விக்கு அவர்களால் போதிய முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது என்று விரிவுரையாளர் கூறுகிறார். பிரிட்டனில் வாழ்வதற்கான செலவுகள் அதிகம். உதாரணத்திற்கு இங்கு நம்மூரில் ஒரு முட்டை 4-6 ரூபாய் வரை இருக்கும். ஆனால் அங்கு 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும்.
இந்த சிக்கல் மாணவர்களை பகுதி நேர வேலைகளை நோக்கி ஓட வைக்கிறது. விரிவுரையாளர்கள் குறிப்பிட்ட 3வது விஷயம் இதுதான். அதிக விலைவாசி, அதை சமாளிக்க பகுதி நேர வேலை, மேலும் மேலும் தேவைப்படும் பணம்.. அதற்காக பகுதி நேர வேலையை முழு நேரமாக்கி, கல்வியை பகுதி நேரமாக சுருக்கிவிடுகிறார்கள். இதனால் கற்றல் குறைபாடு, தொடர்பு தடைகள் உருவாகின்றன.
எனவே பிரிட்டனில் கல்வி பயில செல்லும் இந்திய மாணவர்களில் 90% பேர் அங்கு வேலை கிடைக்காமல் இந்தியாவுக்கு திரும்புகின்றனர். இதற்கு வேறு சில காரணங்களும் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஊடகம் தொடர்பான கல்வியை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள் அது தொடர்பான துறையில் பகுதி நேரமாக வேலை செய்ய வேண்டும். ஆனால், பணம் நிறைய கிடைக்கிறது என்பதால் வேறு வேலையை செய்கிறார்கள். எனவே இவர்களால் இயல்பாகவே துறை சார்ந்த நெட்வொர்க்கை உருவாக்க முடியாமல் போய்விடுகிறது.
அதேபோல இந்திய மாணவர்கள் பிரிட்டன் சமூகத்திற்குள் ஊடுருவுவது கிடையாது. இந்தியர்கள் நிறைந்த பகுதியுடன் நின்றுவிடுகிறார்கள். இது பரவலான தொடர்புகளை பெற முடியாமல் செய்துவிடுகிறது.
"வேலை பெற வேண்டும் என்றால், கல்வியை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். Soft Skills வளர்த்துக்கொள்ள வேண்டும், தொழில் வட்டார தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும்" என்று ரெட்டிட் தளத்தில் விரிவுரையாளர் பதிவிட்டுள்ளார். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே!












Click it and Unblock the Notifications