மத்திய பல்கலை.யில் 3011 எஸ்சி,எஸ்டி, ஓபிசி பேராசிரியர் இடங்களை நிரப்பாத பாஜக அரசு.. அதிர்ச்சி தகவல்!
டெல்லி: மத்திய பல்கலைக் கழகங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான 3011 பேராசிரியர் இடங்களை மத்திய பாஜக அரசு நிரப்பவில்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிக்குமார் இது தொடர்பாக லோக்சபாவில் எழுப்பிய கேள்வியும் மத்திய அரசின் பதிலும்: மத்திய பல்கலைக்கழகங்களில் 33 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படவில்லை என்பது அரசுக்கு தெரியுமா ? அதனால் கல்வி தரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது அரசுக்கு தெரியுமா ? அதன் விவரங்களையும் காரணங்களையும் தெரிவிக்கவும்; காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன குறிப்பாக உயர் கல்வித் துறையில் எஸ்சி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு காலியாக உள்ள பின்னடைவு பணியிடங்களை நிரப்புவதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஐஐடி , ஐஐஎம் , மத்திய பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள காலிப் பணியிடங்களின் விவரங்களைத் தருக என்ற கேள்விகளை இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பி இருந்தேன்.

அதற்கு ஒன்றிய கல்வி அமைச்சர் அளித்த பதிலில் பின்வரும் புள்ளி விவரங்களைக் கொடுத்திருக்கிறார். நாட்டில் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 18956 பதவிகள் நிரப்பப்பட்டதாகவும் 6180 பதவிகள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், அந்தப் பதவிகளை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அளித்துள்ள புள்ளிவிவரம் பின்வருமாறு: மத்திய பல்கலைக்கழகங்களில் எஸ்சி பிரிவினருக்கென ரிசர்வ் செய்யப்பட்ட 307 பேராசிரியர் பதவிகளில் 231ம்; 620இணைப் பேராசிரியர் பதவிகளில் 401 ம்; 1357 உதவிப் பேராசிரியர் பதவிகளில் 276 ம்
நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. எஸ்டி பிரிவினருக்கு அதுபோலவே 123 பேராசிரியர் ,232 இணைப்பேராசிரியர் மற்றும் 188 உதவிப்பேராசிரியர் பதவிகள் காலியாக உள்ளன. ஓபிசி பிரிவினருக்கு 367 பேராசிரியர் பதவிகளில் 311 பதவிகளும்; 752 இணைப்பேராசிரியர் பதவிகளில் 576 ம்; 2332உதவிப் பேராசிரியர் பதவிகளில் 672 ம் நிரப்பப்படவில்லை.
ஐஐடிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கென ஒதுக்கப்பட்ட 11170 ஆசிரியர் பதவிகளில் 4502 பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளன.
ஐஐஎம் களில் எஸ்சி பிரிவினருக்கு ரிசர்வ் செய்யப்பட்ட 97 பதவிகளில் 53 இடங்களும் எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 40 பதவிகளில் 34 இடங்கள் நிரப்பப்படவில்லை. ஓபிசி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 184 இடங்களில் 98 இடங்கள் நிரப்பப்படவில்லை. " என அமைச்சர் தெரிவித்தார்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகங்களைச் சேர்ந்த தகுதி வாய்ந்த லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் இருக்கும்போது ஒன்றிய அரசு இவ்வளவு இடங்களை நிரப்பாமல் வைத்துள்ளது பாஜக அரசு சமூக நீதியை ஒழித்துக் கட்ட முயற்சிக்கிறது என்பதையே காட்டுகிறது. இவ்வாறு ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications