மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால் உள்பட 4 பேர் அடுத்தடுத்து ராஜினாமா
டெல்லி: மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், தாவர்சந்த் கெலாட், சந்தோஷ் கங்வார் மற்றும் தேபஸ்ரீ சவுத்ரி ஆகியோர் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர்.
மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் மோடியின் அமைச்சரவையில் இருந்து விலகி உள்ளார், அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற உள்ள நிலையில் அவர் கல்வி அமைச்சிலிருந்து விடுவிக்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யான போக்ரியால், தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் ஏழு ஆண்டுகள் அமைச்சராக இருந்துள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை விரிவாக்கம் காரணமாக அவர் பதவி விலகி உள்ளார். 2019 ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு மீண்டும் வந்த பின்னர் அமைச்சர்கள் குழுவின் முதல் விரிவாக்கம் இதுவாகும்.

ராஜினாமா
முன்னதாக, இன்று மத்திய அமைச்சர் தேபஸ்ரீ சௌத்திரி அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக பணியாற்றினார். மேற்கு வங்காளத்தின் ராய்கஞ்ச் மக்களவை தொகுதி எம்.பி.யாவார்.

கர்நாடகா ஆளுநர்
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கர்நாடக ஆளுநராக மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெஹ்லோட் நியமிக்கப்பட்டார். கெஹ்லோட் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரின் பதவியை வகித்தார். அவரும் பதவி விலகியதால் அந்த இடம் காலியாக உள்ளது. இன்று அந்த பொறுப்பிற்கு புதியவர் பொறுப்பேற்க உள்ளார்.

தொழிலாளர் நலத்துறை
இதேபோல் இன்று மாலை நடைபெற உள்ள அமைச்சரவை விரிவாக்கத்திற்காக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் (தனி பொறுப்பு) பதவியில் இருந்த சந்தோஷ் கங்வார் இன்று காலை தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதில் அந்த பொறுப்பில் கிஷான் ரெட்டி பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

என்ன பொறுப்பு
மத்திய அமைச்சரவையில் ஜோதிராதித்யா சிந்தியாவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. என்ன பொறுப்பு என்பது தெரியவில்லை. பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ராஜிவ் சந்திரசேகரும் அமைச்சராக உள்ளார். அவருக்கும் என்ன பொறுப்பு என்பது விரைவில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications