மிரட்டும் வான்வெளி சாகசங்கள்.. பெங்களூரில் இன்று தொடங்குகிறது 15-வது பிரம்மாண்ட விமான கண்காட்சி!
டெல்லி: ஏரோ இந்தியாவின்-15 மற்றும் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெளி பாதுகாப்பு கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைக்கிறார்.
கர்நாடகா மாநிலம் பெங்களூர் யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் ஏரோ இந்தியா 2025 கண்காட்சியை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தொடங்கி வைக்கிறார்.

5 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு, உலகளாவிய விமான நிறுவனங்களின் அதிநவீன தயாரிப்புகளுடன் இந்தியாவின் வான்வழி வலிமையையும் உள்நாட்டு அதிநவீன கண்டுபிடிப்புகளையும் வெளிப்படுத்தும். 'தற்சார்பு இந்தியா', இந்தியாவில் தயாரிப்போம்- உலகிற்காக தயாரிப்போம்' என்ற தொலைநோக்கு பார்வைகளுக்கு ஏற்ப, இந்த நிகழ்வு உள்நாட்டுமயமாக்கல் செயல்முறையை விரைவுபடுத்த சர்வதேச ஒத்துழைப்புகளை உருவாக்குவதற்கான ஒரு தளத்தை வழங்கும்.
42,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, 150 வெளிநாட்டு நிறுவனங்கள் உட்பட 900 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களின் பங்கேற்புடன் நடைபெறுகிறது. 90-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்பது, இந்தியாவின் வான்வெளி, பாதுகாப்புத் திறன்களில் வளர்ந்து வரும் உலகளாவிய நம்பிக்கைக்கு ஒரு சான்று. இந்த நிகழ்ச்சியில் 30 நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்கள் அல்லது பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு:
நட்பு நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் 2025 பிப்ரவரி 11 அன்று பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நேரடியாகவும் காணொளி வாயிலாகவும் நடைபெற உள்ளது.
வான்வெளி சாகசங்கள்
இந்த கண்காட்சியை முன்னிட்டு கடந்த சில நாட்களாக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து சாகச ஒத்திகைகளில் ஈடுபட்டன. இந்த சாகசங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.
அமெரிக்கா, ரஷ்யா போர் விமானங்கள்
அமெரிக்கா, ரஷ்யா உளிட்ட நாடுகளின் எப் 35, எஸ்யூ 35 உள்ளிட்ட மிரள வைக்கும் போர் விமானங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன. இதேபோல எஸ்யூ 57 விமானங்களுடன் எப் 35, எப் 16 விமானங்கள் இணைந்து வான்வெளி சாகசத்தில் ஈடுபட உள்ளன.












Click it and Unblock the Notifications