பட்ஜெட் கச்சேரி தொடங்கியது.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 4-வது ஆலோசனைக் கூட்டம்
டெல்லி: மத்திய அரசின் பட்ஜெட் 2025-26-க்கான 4-வது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மத்திய பட்ஜெட் 2025-26 தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார வல்லுநர்கள் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

பொருளாதார வல்லுநர்களான டாக்டர் சுர்ஜித் எஸ் பல்லா, டாக்டர் அசோக் குலாட்டி, டாக்டர் சுதிப்தோ முண்ட்லே, திரு தர்மகீர்த்தி ஜோஷி, திரு ஜன்மேஜயா சின்ஹா, திரு மதன் சப்னாவிஸ், பேராசிரியர் அமிதா பத்ரா, திரு ரிதம் தேசாய், பேராசிரியர் சேத்தன் காடே, பேராசிரியர் பாரத் ராமசாமி, டாக்டர் சவுமியா காந்தி கோஷ், சித்தார்த்த சன்யால், டாக்டர் லவீஷ் பண்டாரி, செல்வி ரஜனி சின்ஹா, பேராசிரியர் கேசப் தாஸ், டாக்டர் பிரீதம் பானர்ஜி, திரு ராகுல் பஜோரியா, நிகில் குப்தா, பேராசிரியர் ஷஷ்வத் அலோக் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி இருந்தார்.

இந்தக் கூட்டத்தில், உலகின் நிச்சயமற்ற பொருளாதாரத் தன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது, இளைஞர்களிடையே வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கான உத்திகள், துறைகளில் நிலையான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான உத்திகள், வளர்ந்து வரும் வேலைவாய்ப்பு சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களை சீரமைப்பதற்கான உத்திகள், வேளாண் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் நிலையான கிராமப்புற வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், தனியார் முதலீட்டை ஈர்த்தல், பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல், வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு பொது நித்தியைத் திரட்டுதல், நித்தி உள்ளடக்கத்தை ஊக்குவித்தல், ஏற்றுமதியை அதிகரித்தல், வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தல் ஆகியவை குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி இருந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த நிலையில் டெல்லியில் இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பட்ஜெட் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் பல்வேறு துறைசார் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications