வரி பகிர்வு.. போராட்டத்தை அறிவித்த மாநிலங்கள்! “அப்படியெல்லாம் இல்லைங்க” மத்திய அரசு அவசர விளக்கம்
டெல்லி: மாநிலங்களுக்கான வரி பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சமாக நடந்துக்கொள்வதாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றன. இந்நிலையில், தனியார் செய்தி ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த மத்திய நிதித்துறை செயலாளர் சோமநாதன், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி மத்திய நிதியமைச்சகம் மாநிலங்களுக்கான வரி பகிர்வு குறித்த அறிக்கையை வெளியிட்டது. அதாவது, மொத்தமாக ரூ.72,961 கோடி விடுவிக்கப்பட்டது. இதில், அதிகபட்சமாக வரி பகிர்வு வழங்கப்பட்டுள்ள முதல் 5 மாநிலங்களில் 4 மாநிலங்கள் பாஜக ஆளும் மாநிலங்கள் அல்லது பாஜகவுடன் கூட்டணியில் உள்ள மாநிலங்களாகும்.

தமிழ்நாடு: விரிவாக சொல்வதெனில், உத்தரப் பிரதேசத்துக்கு 13088 கோடி ரூபாயும், பீகாருக்கு 7338 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசத்துக்கு 5727 கோடி ரூபாயும், மேற்கு வங்கத்துக்கு 4488 கோடி ரூபாயும், மகாராஷ்டிராவுக்கு 4609 கோடியும், ராஜஸ்தானுக்கு 4396 கோடி ரூபாயும், தமிழ்நாட்டிற்கு 2976 கோடியும் வரி பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. தேசிய அளவில் அதிக வரி செலுத்தும் மாநிலங்களில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாட்டு, வரியை திரும்ப பெறுவதில் மட்டும் ஏன் 7வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது என மத்திய அரசை நோக்கி தமிழக அரசியல் தலைவர்கள் பலர் கேள்வியெழுப்பியிருந்தனர்.
கர்நாடகா: தமிழ்நாட்டை தொடர்ந்து, கர்நாடக அரசும் வரி பகிர்வு குறித்து கேள்வி எழுப்ப தொடங்கியது. அதாவது, "நிதி ஆணையம் கர்நாடகாவுக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டது. நிதி இழப்பை சரி செய்ய கர்நாடகாவுக்கு ரூ5,495 கோடி சிறப்பு நிதி ஒதுக்க பரிந்துரைத்தது நிதி ஆணையம். இதை மத்திய அரசு தரவே இல்லை. கடந்த 15 ஆவது நிதி ஆணையம் கர்நாடகாவுக்கு ரூ73,593 கோடி நிதியை குறைத்துவிட்டது.
போராட்டம்: கர்நாடகா, மத்திய அரசுக்கு ரூ100 கொடுத்தால் எங்களுக்கு ரூ12 அல்லது ரூ13 தான் தருகிறது. கர்நாடகா மட்டும் ஆண்டுக்கு ரூ4.30 லட்சம் கோடி வரி செலுத்துகிறது. இதில் வெறும் ரூ50,257 கோடிதான் கர்நாடகாவுக்கு கிடைக்கிறது. 15-வது நிதி ஆணையத்தை அமைத்த பின்னர் ரூ.1.87 லட்சம் கோடி இழப்பு கர்நாடகாவுக்கு ஏற்பட்டிருக்கிறது" என அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கொந்தளித்தார். மட்டுமல்லாது இது தொடர்பாக நாளை டெல்லியில் போராட்டத்தை நடத்த உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
கேரளா: கேரளாவை பொறுத்த அளவில், "தேசிய அளவில் வரி பகிர்வில் தென் மாநிலங்களுக்கு குறைவான தொகை மட்டுமே கொடுக்கப்படுகிறது. குறிப்பாக, கேரளா இந்த குறைவான வரி பகிர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இதற்கு எதிராக கேரள எம்பிக்கள் டெல்லியில் வரும் 8ம் தேதி மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடுவார்கள்" என்று அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.
மட்டுமல்லாது மத்திய+மாநில அரசின் கூட்டு நிதியால் செயல்படுத்தப்படும் திட்டங்களில், பாதி நிதியை ஒதுக்கிவிட்டு, தாங்கள் முன் வைக்கும் மாற்றங்களை செய்தால் மட்டுமே மீதி நிதியை ஒதுக்குவோம் என கேரளாவில் மத்திய அரசு முரண்டு பிடித்து வருகிறது.
இப்படியாக, மத்திய அரசுக்கு எதிராக மாநில அரசுகள் வரிசைக்கட்டி நிற்க, அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இந்நிலையில் தனியார் செய்தி ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டியளித்த மத்திய நிதித்துறை செயலாளர் சோமநாதன், மாநில அரசுகளின் குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறார்.
விளக்கம்: புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சோமநாதன், "கூட்டுக் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் அவர்கள் வருமானத்தின்படி நிதியை ஒதுக்க முடியுமா? எந்த மாநிலத்தில் எவ்வளவு வரி வசூலிக்கப்படுகிறது என்பதிலும் பல்வேறு கோணங்கள் உள்ளன. நிதிப் பங்கீடு பிரச்னை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. மாநிலங்களுக்கு வரிப் பங்கீடு செய்வதில் பாரபட்சம் கிடையாது. நிதி ஆணைய பங்கீடுபடி மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை விடுவிக்கிறது" என்று விளக்கமளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications