பெட்டிங், பந்தய ஆன்லைன் விளையாட்டுக்கு அனுமதியில்லை..மத்திய அரசு அதிரடி! வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
டெல்லி: ஆன்லைன் விளையாட்டுக்கான இறுதி வழிக்காட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி பல்வேறு துறை நிபுணர்கள் அடங்கிய சுய ஒழுங்கு கட்டுப்பாட்டு அமைப்பு அமைக்கப்படும் எனவும், பணம் வைத்து பந்தயம் கட்டும் வகையிலான ஆன்லைன் விளையாட்டுகள் அனுமதியில்லை எனவும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 42க்கும் அதிகமானவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதனால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் சட்டமசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து 2வது முறையாக ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்என் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய மத்திய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு உள்பட பல மாநில அரசுகள் தொடர்ந்து கோரிக்கைகள் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆன்லைன் விளையாட்டுக்கான இறுதி விதிகளை வகுத்து நேற்று வழிக்காட்டு நெறிமுறைகளை அறிவித்தது. கடந்த ஜனவரி மாதம் ஆன்லைன் விளையாட்டுக்கான வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்ட நிலையில் நேற்று இறுதி விதிகளும், வழிக்காட்டு நெறிமுறைகளும் வெளியாகின.
அதன்படி தொழில்துறை பிரதிநிதிகள், கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் நல வல்லுநர்கள், உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்துறை நிபுணர்கள் அடங்கிய சுய-ஒழுங்குமுறை அமைப்புகள்(self-regulatory organisations அல்லது SRO) உருவாக்கப்பட உள்ளது. முதலில் 3 சுய ஒழுங்குமுறை அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன்பிறகு அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குமுறை அமைப்புகள் ஆன்லைன் விளையாட்டுகள் பந்தயங்களை அடிப்படையாக கொண்டுள்ளதா? இல்லையா? என்பதை கண்காணித்து அறிவிப்பு செய்யும் பணியை மேற்கொள்ளும். இது தனிப்பட்ட அதிகாரத்துடன் செயல்பட உள்ளது.

இதுபற்றி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறுகையில், ‛‛பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளை மட்டுமே நாங்கள் ஒழுங்குப்படுத்துகிறோம். மற்றபடி பிற அனைத்து வகையான விளையாட்டுகளும் எந்த நெறிமுறைகளும் இன்றி அனுமதிக்கப்படும். ஆன்லைன் விளையாட்டுக்கான சுயஒழுங்குமுறை அமைப்புகள் ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணித்து பந்தயத்தை உள்ளடக்கவில்லை என்பதை கூறினால் அந்த விளையாட்டும் அனுமதிக்கப்படும்.
மாறாக உண்மையிலேயே பணத்தை கையாளும் ஆன்லைன் விளையாட்டுகளும், பந்தயம் கட்டுவதன் மூலம் விளையாடப்படும் ஆன்லைன் விளையாட்டுகளும் அனுமதிக்கப்படாது. பணம் பயன்படுத்தப்படும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கேஒய்சி என்னும் வாடிக்கையாளர்கள் பற்றிய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications