பொது படிப்பறிவு- பழங்குடி படிப்பறிவு இடைவெளி தமிழகத்தில்தான் மிக அதிகம்- மத்திய அரசு அதிர்ச்சி தகவல்
டெல்லி: பொதுவான படிப்பறிவுக்கும் பழங்குடியின மக்களின் படிப்பறிவுக்கும் இடையேயான இடைவேளி இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது என நாடாளுமன்ற லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய அரசு அதிர்ச்சி பதிலை தந்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரவிக்குமார் எம்பி கூறியிருப்பதாவது:
நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகள்:

(அ) புவியியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்படுதல், வறுமை, சமூக-பண்பாட்டுத் தடைகள் போன்ற பல சவால்களை எதிர்கொள்ளும் பழங்குடி பெண்களிடையே காணப்படும் குறைந்த எழுத்தறிவு ( literacy) விகிதத்தை சரி செய்ய அரசு எடுத்த/எடுத்து வரும் நடவடிக்கைகள் யாவை?;
(ஆ) பெண்களை மையமாகக் கொண்ட எழுத்தறிவுப் பிரச்சாரங்கள், பழங்குடி பெண்களுக்கான குடியிருப்புப் பள்ளிகளை நிறுவுதல் மற்றும் அவர்களின் கல்வியை ஊக்குவிக்க உதவித்தொகைகள் அல்லது நிதி ஊக்கத்தொகைகளை வழங்குதல் போன்ற திட்டங்களின் விவரங்களை வழங்குக;
(இ) ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி புள்ளிவிவரங்கள் உட்பட, பட்டியலிடப்பட்ட பழங்குடியினரின் (எஸ்.டி) எழுத்தறிவு விகிதங்கள் குறித்த தரவு அரசிடம் உள்ளதா, அப்படியானால், அதன் விவரங்களை, மாநில வாரியாக வழங்குக;
(ஈ) தொடக்கக் கல்வி, இடைநிலைக் கல்வி மற்றும் உயர்நிலைப் பள்ளிக் கல்வி நிலைகள் உட்பட பள்ளிக் கல்வி மட்டத்திலும், உயர்கல்வியிலும் பழங்குடியினரின் தற்போதைய மொத்த சேர்க்கை விகிதம் (GER); மற்றும்
(இ) பழங்குடி மக்களிடையே, குறிப்பாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில்,மொத்த சேர்க்கை விகிதத்தை அதிகரிக்க அரசாங்கம் ஏதேனும் குறிப்பிட்ட முயற்சிகளை மேற்கொண்டுள்ளதா, அப்படியானால், அதன் விவரங்களைத் தருக?
இதற்கு எழுத்துபூர்வமாக மத்திய பழங்குடியினர் நலத்துறை இணை அமைச்சர் துர்காதாஸ் உய்க்கி அளித்த பதில்கள்
- இந்தியாவிலேயே பொதுவான படிப்பறிவு நிலைக்கும் பழங்குடியினரின் படிப்பறிவு நிலைக்கும் இடையே அதிகபட்சமான இடைவெளி தமிழ்நாட்டில் தான் உள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவல் அதில் தெரியவந்துள்ளது.
- 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்திய அளவில் பொதுவான படிப்பறிவு நிலைக்கும் ( general literacy) பழங்குடியினரின் படிப்பறிவு நிலைக்கும் ( tribal literacy) இடையே 14% இடைவெளி உள்ளது என்று அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பொதுவான படிப்பறிவு விகிதம் 80.1% ஆகவும் பழங்குடியினரின் படிப்பறிவு விகிதம் 54. 3% ஆகவும் உள்ளது. இரண்டுக்கும் இடையே 25. 8% இடைவெளி இருக்கிறது.
-பழங்குடி பெண்களின் படிப்பறிவு நிலையை எடுத்துக் கொண்டால் அதிலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் மிகவும் பின்தங்கியுள்ளது. பொதுவான பெண்களின் படிப்பறிவு 73.4% ஆக உள்ளது. ஆனால், பழங்குடியினப் பெண்களின் படிப்பறிவு விகிதம் 46.8% ஆக இருக்கிறது இரண்டுக்கும் இடையில் 26.6% இடைவெளி உள்ளது.
- 2023-24 ஆம் ஆண்டு பள்ளிக்கல்வி நிலவரம் குறித்த UDISE அறிக்கையின் அடிப்படையில் பள்ளியில் சேர்க்கை விகிதம் குறித்த விவரமும் அமைச்சரால் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஆரம்பக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயர்நிலைக் கல்வி ஆகியவற்றில் பழங்குடி மாணவர்களின் சேர்க்கை விகிதத்தில் இந்திய சராசரியைவிட தமிழ்நாட்டின் சேர்க்கை சதவீதம் கூடுதலாக உள்ளது. அதுமட்டுமின்றி எல்லா வகுப்புகளிலும் மாணவர்களைவிட மாணவிகளின் பங்கேற்பு அதிகம் உள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் பழங்குடியினரின் கல்வி வளர்ச்சிக்குத் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் பயனைக் காட்டுகிறது.
பழங்குடியினரின் படிப்பறிவு விகிதம் எத்தனை சதவீதம் என்பது அடுத்து எடுக்கப்போகும் சென்சஸில்தான் சரியாகத் தெரியவரும். எப்படியிருப்பினும் பொதுக் கல்வி நிலைக்கும் எஸ்சி மக்களின் கல்வி நிலைக்கும் இடையே இடைவெளி இருப்பதுபோல எஸ்டி மக்களின் கல்வி நிலையும் பின் தங்கியே இருக்கும். அவர்கள் எளிதாக அணுகும் தொலைவில் பள்ளிகளைத் திறப்பது, உண்டு உறைவிடப் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, சிறப்பு படிப்பு உதவித் தொகைத் திட்டம் ஒன்றை மாநில அரசு அறிவிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்களை சமூகத்தின் மற்ற தரப்பினருக்கு இணையான படிப்பறிவைப் பெறச் செய்யும்.
தமிழ்நாடு முதலமைச்சர், பழங்குடி மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க சிறப்புத் திட்டம் ஒன்றை எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ரவிக்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications