ஆந்திரா வெள்ளம்: வசமாக சிக்கிய மத்திய அரசு.. தேசிய பேரிடராக அறிவிக்காதா? ஆட்சியை கவிழ்ப்பாரா நாயுடு?
டெல்லி: ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வரலாறு காணாத பெருமழை வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. இதனால் ஆந்திரா, தெலுங்கானா மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிவிட்டது. இந்தப் பெருந்துயரத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி ஆட்சி அமையக் காரணமான தெலுங்குதேசம் கட்சித் தலைவரும் ஆந்திரா முதல்வருமான சந்திரபாபு நாயுடு வலியுறுத்தி வருகிறார். ஆனால் மழை வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்கவே முடியாது என பிடிவாதம் பிடித்த மத்திய அரசு இப்போது என்ன செய்யப் போகிறது என்பது கேள்வி.
தமிழ்நாட்டிலும் பெருமழை கொட்டித் தீர்த்தது. சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டை மிக்ஜாம் புயல் புரட்டி எடுத்தது. இந்தப் பெரும் புயலின் பாதிப்பில் இருந்து தமிழ்நாடு மீள்வதற்குள் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை பெருமழை வெள்ளம் சிதைத்து சின்னாபின்னமாக்கியது. தென் மாவட்டங்களும் வடமாவட்டங்களும் ஒருசேர பெருவெள்ளத்தில் சிக்கி ஒட்டுமொத்த தமிழ்நாடே பெருந்துயரத்தில் தத்தளித்தது.

மத்திய குழுவும் மத்திய அமைச்சரும்: இத்தகைய பெருந்துயரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்; தமிழ்நாட்டுக்கான பேரிடர் நிவாரண நிதியை ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அப்போது மத்திய அரசின் குழு கூட தமிழ்நாட்டுக்கு வந்து பார்வையிட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தென் தமிழக வெள்ளத்தைப் பார்வையிட்டார். அப்போதுதான், கோவில் ஒன்றைப் பார்வையிட்டு பக்தர்களே! உண்டியலில் காசு போடாமல் அர்ச்சகர் தட்டில் போடுங்கள் என நிர்மலா சீதாராமன் பேசினார். இதனை அண்மையில் நாடாளுமன்றத்தில் திமுக எம்பி கனிமொழியும் சுட்டிக்காட்டி இருந்தார்.
தமிழ்நாட்டின் முகத்தில் அறைந்தது போல: தமிழ்நாட்டின் இந்த பேரிடர் பாதிப்புக்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.21,700 கோடி நிதி கோரியிருந்தார். ஆனால் சொற்பமான தொகையைத்தான் மத்திய அரசு கொடுத்தது. அத்துடன் நிற்கவில்லை.. அதெப்படி புயல், மழை வெள்ளத்தை எல்லாம் தேசியப் பேரிடராக அறிவிக்க முடியும்.. அப்படி எல்லாம் அறிவிக்கவே முடியாது என முகத்தில் அறைந்தது போல சொன்னதும் மத்திய பாஜக அரசுதான்.
சந்திரபாபு நாயுடுவுக்கும் அதே பதில்தானா?: இப்போது ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்கள் பெருமழை வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன. இதனையும் தேசியப் பேரிடராகவே அறிவிக்க வேண்டும் என்கிறோம். ஆனால் தமிழ்நாட்டின் முகத்தில் அறைந்தது போல பேசிய மத்திய அமைச்சர்கள், இப்போது ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கும் பதில் தருவார்களா? நிச்சயம் மழுப்பலான பதிலைத்தான் தருவார்கள்.
மழுப்பலான பதிலை தரப் போகும் மத்திய அமைச்சர்கள்: ஆந்திரா தேசமோ வெள்ளத்தில் தத்தளிக்கிறது.. அப்படிப்பட்ட ஆந்திரா மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களின் "தயவில்தான்" மத்தியில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு தற்போது நடைபெற்று வருகிறது. ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கடி தரும் பதிலை கொடுத்தால் அவர் மத்தியில் ஆளும் ஆட்சியை கவிழ்க்கும் வகையில் 'ஆதரவை வாபஸ்' பெறுவாரோ என்கிற பேரச்சத்தால்தான் இத்தகைய மழுப்பலான பதிலைத் தருவார்கள் மத்திய அமைச்சர்கள். இல்லை இல்லை.. நாங்கள் எப்போதும் எல்லா மாநிலங்களையும் ஒன்றாக நடத்துவோம்.. ஆந்திராவுக்கும் அப்படித்தான் பதில் தருவோம் என்றெல்லாம் மத்திய அமைச்சர்கள் சொல்லத்தான் போகிறார்களா? அல்லது சொல்லித்தான் பார்க்கட்டுமே.. என்ன நடக்கும் என அப்போது தெரிந்துவிடுமே!












Click it and Unblock the Notifications