உ.பி. வன்முறை.. அமித்ஷாவுடன் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா சந்திப்பு.. பதவி விலக முடிவு?.. பரபர தகவல்
டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் நடந்த வன்முறை தொடர்பாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் அருகே உள்ள மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் கிராமத்தில் நிகழ்ச்சி நடைபெற இருந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

வன்முறை
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். அங்கு காரில் வந்த மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகள் கூட்டத்தில் காரை மோத செய்ததாக கூறப்படுகிறது. இதன்பின்னர் விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் பெரும் மோதல் மூண்டது. இந்த வன்முறையில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அனுமதி மறுப்பு
இதன்பினர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். உத்தரபிரதேசம் என்ன பாகிஸ்தானிலா இருக்கிறது? ஏன் அனுமதி கொடுக்க மறுக்கீறீர்கள்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியது. பெரும் சர்ச்சை எழுந்ததால் பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் லக்கிம்பூர் செல்ல பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.

பதவி விலக வேண்டும்
மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் விவசாயிகளை கொலை செய்ததாகவும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவருமான அமித் ஷாவை இன்று திடீரென சந்தித்து பேசினார்.

அஜய் மிஸ்ரா ரராஜினாமா?
சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் லக்கிம்பூர் விவகாரம் குறித்து பேசப்பட்டது. அஜய் மிஸ்ரா தனது பதவியை ராஜினாமா செய்து கொள்வதாக அமித்ஷாவிடம் தெரிவித்ததாகவும், அவர் ஒரு சில நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்றும் ஒரு சில தகவல்ககள் கூறுகின்றன. அதே வேளையில் தனது மகனுக்கும், இந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் ஒரு சில வீடியோக்களை அமித்ஷாவிடம் காட்டி விட்டதாகவும் இதனால் அஜய் மிஸ்ரா பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்று பா.ஜ.க தலைமை தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் உலா வருகின்றன. அஜய் மிஸ்ரா பதவியை ராஜினாமா செய்வாரா? இல்லையா? என்பது சில நாட்களில் தெரிந்து விடும்.












Click it and Unblock the Notifications