பிப்.15 முதல் காசி தமிழ்ச் சங்கமம் தொடக்கம்; பிப்.1 முதல் இணையதளத்தில் முன்பதிவு செய்வது எப்படி?
டெல்லி: காசி தமிழ்ச் சங்கமத்தின் 3-வது கட்டம் பிப்ரவரி 15-ந் தேதி முதல் பிப்ரவரி 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான முன்பதிவு பிப்ரவரி 1-ந் தேதி தொடங்குகிறது. சென்னை ஐஐடி நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், காசி தமிழ் சங்கமத்தின் 3-வது கட்டப் பதிவிற்கான இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர் இந்த 3-வது கட்ட காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி பிப்ரவரி 15-ந் தேதி, உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் தொடங்கும்; 10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு பிப்ரவரி 24- ந் தேதி முடிவடையும். சென்னை தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) kashitamil.iitm.ac.in என்ற இணையதளத்தில், பிப்ரவரி 1-ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.

மேலும் தமிழகம் - காசி இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு காசி தமிழ்ச் சங்கமம் 3-ம் கட்டத்தின் மூலம் மீண்டும் உயிர் பெறும். பிரதமர் நரேந்திர மோடியின் சிந்தனையில் உதித்த காசி தமிழ்ச் சங்கமம், தமிழ்நாடு - காசி இடையேயான காலத்தால் அழியாத பிணைப்பை கொண்டாடவும், நாகரிக தொடர்புகளை வலுப்படுத்தவும், ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வை மேம்படுத்தவும் உத்வேகம் அளிப்பதற்கான முயற்சியாகும் என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
இந்த ஆண்டு, காசி தமிழ் சங்கமம் மகா கும்பமேளா நிகழ்ச்சியுடன் ஒன்று சேர்ந்து நடைபெறுவதால் தனிச் சிறப்பு முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என்றும், அயோத்தியில் ஸ்ரீ ராம் லல்லாவின் 'பிராண பிரதிஷ்டாவுக்கு' பிறகு நடைபெறும் முதல் சங்கம நிகழ்ச்சி இது என்றும் தர்மேந்திர பிரதான் கூறினார்.
அகத்திய முனிவரின் பல்வேறு பரிமாணங்கள், சுகாதாரம், தத்துவம், அறிவியல், மொழியியல், இலக்கியம், அரசியல், பண்பாடு, கலை, குறிப்பாக தமிழ்நாடு ஆகிய துறைகளில் அவர் அளித்த அளப்பரிய பங்களிப்புகள் குறித்த கண்காட்சி, கருத்தரங்குகள், பயிலரங்குகள், புத்தக வெளியீடு போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பங்கேற்போருக்காக ஐந்து பிரிவுகளில் விண்ணப்பங்கள் பின்வரும் இணையமுகப்பு வாயிலாக வரவேற்கப்படுகின்றன - http://kashitamil.iitm.ac.in. பொதுமக்கள் இதில் விண்ணப்பப் பதிவு செய்து கொள்ளலாம். இந்நிகழ்வுக்கு பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் (Banaras Hindu University - BHU) வரவேற்புக் கல்வி நிறுவனமாக செயல்படும்.
இது தொடர்பாக ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் பேராசிரியர் வி.காமகோடி கூறும்போது, தமிழ்நாட்டில் இருந்து ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, சம எண்ணிக்கையில மொத்தம் 1,000 பங்கேற்பாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், வேளாண் விவசாயிகள், கைவினைஞர்கள், தொழில் வல்லுநர்கள், சிறு தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் பெண்களும், ஆராய்ச்சியாளர்களும் இதில் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். அது மட்டுமின்றி, அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் இருந்து 200 தமிழ் மாணவ-மாணவிகளைக் கொண்ட குழுவினரும் இந்நிகழ்வில் பங்கேற்று வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி போன்ற இடங்களை உள்ளூர் அளவில் பார்வையிடும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றார்.
பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்களிடையே தொடர்புகளை எளிதாக்குவதன் மூலம், பண்டைய இந்தியாவின் இரண்டு முக்கிய கற்றல் மற்றும் கலாச்சார மையங்கக்கும் இடையிலான கலாச்சார தொடர்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் காசி தமிழ்ச் சங்கமத்தின் நோக்கமாகும்.












Click it and Unblock the Notifications