'விவசாயிகள் அனைவரும் குண்டர்கள்'.. தேவையில்லாமல் வார்த்தையை விட்டு மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்!
டெல்லி: விவசாயிகளை குண்டர்கள் எனக் கூறியதற்கு மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி மன்னிப்பு கேட்டுள்ளார். தனது வார்த்தைகளை மாற்றி வேறு மாதிரி பரப்பி விட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் 8 மாதங்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி பெண்கள், குழந்தைகள் என குடும்பத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாயிகள் திட்டவட்டம்
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்கவில்லை.வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது. ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறி வருகின்றனர்.

விவசாயிகள் நாடாளுமன்றம்
தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க விவசாயிகள் திட்டமிட்டனர். ஆனால் இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதே வேளையில் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்திக் கொள்ள போலீசார் அனுமதி வழங்கினார்கள். இதன்படி ஜந்தர் மந்தர் பகுதியில் 'விவசாயிகள் நாடாளுமன்றம்' நிகழ்ச்சியை விவசாயிகள் நடத்துகிறார்கள்.

மத்திய அமைச்சர் கருத்து
இதற்காக சிங்கு எல்லையில் இருந்து தினமும் 200 விவசாயிகள் ஜந்தர் மந்தர் பகுதிக்கு செல்வார்கள் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் விவசாயிகளின் போராட்டம் குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் மீனாட்சி லேகியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ' டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல; குண்டர்கள். ஜனவரி 26-ம் தேதி டெல்லியில் நடந்தது எல்லாம் வெட்கக்கேடான செயல்கள். இவர்கள் செய்வது எல்லாம் குற்றச் செயல்கள்தான்.

விவசாயிகள் கண்டனம்
ஜந்தர் மந்தரில் நடந்த விவசாயிகள் நாடாளுமன்றத்தில் கூட பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். ஆனால் எதிர்க்கட்சி இதுபோன்ற விவசாயிகளின் நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது' என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் மீனாட்சி லேகியின் கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. "இதுபோன்ற ஒரு கருத்து இந்தியாவின் 80 கோடி விவசாயிகளுக்கு ஏற்பட்ட அவமானம். நாங்கள் குண்டர்களாக இருந்தால், அமைச்சர் மீனாட்சி லேகி நாங்கள் உற்பததி செய்யும் உணவு பயிர்களை சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்'' என்று விவசாய சங்க தலைவர்கள் ஆவேசமாக தெரிவித்தனர்.

கூறியது என்ன?
இந்த நிலையில் தனது கருத்துக்கு மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- ஒரு பத்திரிகையாளர் சந்திப்பின்போது, ஜனவரி 26-ம் தேதி நடந்த செங்கோட்டை வன்முறை மற்றும் உழவர் நாடாளுமன்றத்தில் பத்திரிகையாளர் மீதான தாக்குதல் குறித்து என்னிடம் கருத்து கேட்டனர். .அதற்கு பதிலளித்த நான், குண்டர்கள் மட்டுமே இவ்வாறு ஈடுபடுவார்கள்; விவசாயிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்று தெரிவித்தேன்.

மன்னிப்பு கேட்டார்
ஆனால் எனது வார்த்தைகளை மாற்றி வேறு மாதிரி பரப்பி விட்டுள்ளனர். எனது வார்த்தைகள் விவசாயிகளையோ அல்லது வேறு யாரையாவது காயப்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். எனது வார்த்தைகளை திரும்பப் பெற்று கொள்கிறேன். இவ்வாறு மீனாட்சி லேகி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications