'பஞ்சாங்கம்' பஞ்சாயத்து நடிகர் மாதவனுக்கு மத்திய பாஜக அரசு ஆதரவு-'ராக்கெட்ரி' காட்சியை திரையிட்டது!
டெல்லி: பஞ்சாங்கம் சர்ச்சையில் சிக்கிய நடிகர் மாதவனின் ராக்கெட்ரி- நம்பி விளைவு திரைப்படத்துக்கு மத்திய பாஜக அரசு ஆதரவு அளித்துள்ளது. ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படத்தி்ன் சிறப்புக் காட்சியை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் டெல்லியில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில் சிறப்பு காட்சியாக திரையிட்டது.
Recommended Video
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணின் வாழ்க்கையை மையமாக கொண்டது நடிகர் மாதவன் இயக்கி நடித்துள்ள ராக்கெட்ரி நம்பி விளைவு திரைப்படம். கேரளாவை சேர்ந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டு சிறைவாசம் அனுபவித்தார். பின்னர் அவர் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டார்.

பஞ்சாங்க சர்ச்சையில் மாதவன்
இத்திரைப்படம் தொடர்பாக பேசிய நடிகர் மாதவன், 2014-ல் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் செலுத்தும்போது 1000 ஆண்டுகளுக்கு முன்பே கணித்து வைத்த செலஸ்டியல் பஞ்சாங்கம் மூலம் துல்லியமாக மற்ற கிரங்களை எல்லாம் தட்டிவிட்டுட்டு நேரடியாக அனுப்பினார்கள் என கூறியிருந்தார். அதாவது பஞ்சாங்கத்தை அடிப்படையாக வைத்தே செவ்வாய்கிரகத்துக்கு விண்கலத்தை இந்தியா அனுப்பியது என்பது மாதவனின் கருத்து. இதற்கு மிக கடுமையாக எதிர்ப்பு எழுந்தது. இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் நடிகர் மாதவனின் கருத்துகளை கடுமையாக எதிர்த்தனர். இதனைத் தொடர்ந்து தமது அறியாமை தொடர்பாக வருத்தம் தெரிவித்தார் மாதவன்.

டெல்லியில் மத்திய அரசின் சிறப்பு காட்சி
இந்நிலையில் மாதவனின் ராக்கெட்ரி: நம்பி விளைவு திரைப்படத்தி்ன் சிறப்புக் காட்சியை, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், டெல்லியில் உள்ள சிரி ஃபோர்ட் அரங்கத்தில், திரையிட்டது. மாதவன் தலைமையிலான ராக்கெட்ரி திரைப்படக் குழுவினர் கலந்து கொண்டனர். சிபிஐயின் முன்னாள் இயக்குநர் டி.ஆர்.கார்த்திகேயன், முன்னாள் ஐஜி பி.எம்.நாயர், அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் திரைப்படத்துறையை சேர்ந்த பலரும் இதில் கலந்து கொண்டனர்.

நடிகர் மாதவன்
இதில் பேசிய நடிகர் மாதவன், விண்வெளி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் ஆளுமையை போற்றும் படமாக இது இருக்கும் என்று கூறினார். விகாஸ் எஞ்சினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நம்பி நாராயணனுக்கு இந்தப் படம் சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவித்தார். இந்தியாவின் அறிவியல் வளர்ச்சி மற்றும் மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் இந்தியாவின் திறமை குறித்து உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக இந்தப் படம் உள்ளது என்றார்.

விஞ்ஞானிகளுக்கு சமர்ப்பணம்
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறையின் செயலர் அபூர்வ சந்திரா கூறுகையில், இந்தப் படம் பார்வையாளர்களை கவர்வது மட்டுமின்றி, இதயத்தையும் தொடுவதாக தெரிவித்தார். இந்திய விண்வெளித்துறையின் சாதனைகளுக்காக தங்கள் வாழ்நாளையே அர்ப்பணித்த நம்பி நாராயணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளுக்கு இந்தப் படம் சமர்ப்பணம் என்றும் அபூர்வ சந்திரா கூறினார்.












Click it and Unblock the Notifications