உன்னாவ்.. குல்தீப் செங்கார் தண்டனை.. டிச. 20ம் தேதி விசாரணை ஒத்திவைப்பு: டெல்லி நீதிமன்றம்
டெல்லி: உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக உறுப்பினர் குல்தீப் செங்காருக்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்த விசாரணையை டெல்லி சிறப்பு ஹைகோர்ட் டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
உன்னாவில் நடந்த பாலியல் வன்புணர்வும் அதை தொடர்ந்த மர்ம கொலைகளும் உத்தரபிரதேசத்தை மட்டுமில்லாமல், மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. 2018 ஏப்ரலில் உத்தர பிரதேசத்தின் உன்னாவில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மீது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் தெரிவித்தார்.

இந்த வழக்கு விசாரணை இத்தனை நாட்களாக நடந்து வந்தது.இவ்வழக்கில் புகார் தெரிவித்த பெண்ணின் குடும்பத்தினர் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடர்ச்சியாக குல்தீப் ஆதரவாளர்கள் மூலம் மிரட்டப்பட்டு வந்தனர். இந்த நிலையில் அந்த பெண்ணின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தனர்.
வரிசையாக அந்த பெண்ணுக்கு நெருக்கமான உறவினர்கள் வரிசையாக மரணம் அடைந்தது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண், அவரது தாயார், வழக்கறிஞர் மற்றும் உறவினர்கள் வாகனத்தில் செல்லும் போது அந்த வாகனம் விபத்துக்குள்ளானது.இதில் பெண்ணின் தாயார் உள்ளிட்ட 2 பேர் பலியாகினர்.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் டெல்லி நீதிமன்றம் வழக்கை 45 நாட்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இதனால் லக்னோ ஹைகோர்ட்டில் இருந்து மாற்றப்பட்டு டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. இதன் மீதான விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. முன்னாள் பாஜக உறுப்பினர் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் இந்த வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு உள்ளார். அதனால் இவருக்கு பெரும்பாலும் ஆயுள் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதில் நடத்தப்பட்ட கொலைகள், மர்ம மரணங்கள் தொடர்பான வழக்குகள் தனியாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இவருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை விவரங்களை டெல்லி ஹைகோர்ட் இன்று விசாரித்தது
இதில் சிபிஐ, குல்தீப் செங்காருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்க வேண்டும். அதேபோல் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உடனடியாக நிதி உதவி அளிக்க வேண்டும். குல்தீப் அந்த பெண்ணுக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று வாதம் வைத்தது.
ஆனால் இதை எதிர்த்த குல்தீப் தரப்பு, குல்தீப் ஜெயிலில் மிகவும் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார். அவரால் அதிக தொகையை நஷ்டஈடாக வழங்க முடியாது என்று கூறினார்கள். இதையடுத்து உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக உறுப்பினர் குல்தீப் செங்காருக்கு வழங்கப்பட உள்ள தண்டனை குறித்த விசாரணையை டெல்லி சிறப்பு ஹைகோர்ட் டிசம்பர் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.குல்தீப் செங்காரின் சொத்து மதிப்பை தாக்கல் செய்ய வேண்டும், 2017 தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த சொத்து மதிப்பை அளிக்க வேண்டும் என்று டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications