இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை- காங்கிரஸ் கூட்டணி அரசையும் சேர்த்து விமர்சித்த ராகுல் காந்தி!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்துவிட்டது; உலகின் உற்பத்தித் துறைகள் பெரும்பாலும் சீனா வசமே இருக்கின்றன; நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆற்றிய உரையில் முக்கிய அம்சம் எதுவுமே இல்லை; காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் இன்றைய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை எதிர்கொள்ள தவறிவிட்டன என்று லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது: ஜனாதிபதி ஆற்றிய உரை என்பது கடந்த சில ஆண்டுகளாக மாறாமல் ஒரே மாதிரியாக சலவை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் பட்டியல் போலவே உள்ளது

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டம், நல்ல ஐடியாதான். ஆனால் மேக் இன் இந்தியா திட்டம் என்ன சாதித்தது என்பதை பாருங்கள்? 2014-ம் ஆண்டு உள்நாட்டு பொருளாதார உற்பத்தி 15.3% ஆக இருந்தது. தற்போது இது 12.6% ஆக குறைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் உற்பத்தி துறையில் இல்லாத பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி மேக் இன் இந்தியா திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தார்; ஆனால் அத்திட்டம் தோல்வியடைந்துவிட்டது.
நாம் வளர்ந்து கொண்டிருக்கிறோம்; அதிவேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து கொன்டிருக்கிறோம்.. ஆனால் உலகம் முழுவதும் எதிர்கொள்கிற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை நாமும் சந்திக்கிறோம். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகட்டும்.. (காங்கிரஸ் தலைமையிலான அரசு) தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாகட்டும் வேலைவாய்ப்பின்மை தொடர்பாக இந்த நாட்டு இளைஞர்களுக்கு தெள்ளத் தெளிவான பதில் எதனையுமே தரவில்லை.
இன்றைக்கு ஏஐ தொழில்நுட்பம் பற்றி பேசுகிறோம். இன்றைக்கு கார்களில் கூட தரவுகள் சேமிப்பு வந்துவிட்டது. அனைத்து அடிப்படையான எலக்ட்ரானிக் சாதனங்களிலும் தரவுகள் சேமிப்பு இருக்கிறது. இந்த சாதனங்களில் பெரும்பாலானவை சீனாவின் உற்பத்தியாகவும் இருக்கிறது. தரவுகள் சேமிப்பு என்பது அமெரிக்காவிடம் இருந்து பெறப்படுகிற தொழில்நுட்பம். இந்த துறைகளில் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவை விட சீனா முன்னணியில் இருந்து வருகிறது.
ரோபோக்கள், பேட்டரிகள், மோட்டர்கள் என கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து
உற்பத்தித் துறைகளிலும் சீனா முன்னணியில் இருக்கிறது. நாம் பின் தங்கியே இருக்கிறோம். வெளியுறவுத்துறை சார்ந்த பேச்சுவார்த்தைகளில் இவை எல்லாம் இடம் பெற்றிருக்க வேண்டும். நாம் அமெரிக்காவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சரை அனுப்பி நமது பிரதமரை பதவியேற்பு விழாவுக்கு வருமாறு அழைக்க வேண்டும் என கேட்க வேண்டியது இருக்காது; உற்பத்தித் துறையில், தொழில்நுட்பத்துறையில் நாம் முன்னணியில் இருந்தால் அமெரிக்காவின் அதிபர், இந்தியாவுக்கு வந்து நமது நாட்டு பிரதமரை தங்களது நாட்டுக்கு வருகை தருமாறு அழைப்பு விடுப்பார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
லோக்சபா தேர்தலுக்கு முன்னர் 400 இடங்களைக் கைப்பற்றுவோம்; அரசியல் சாசனத்தை திருத்தி எழுதுவோம் என பாஜகவினராகிய நீங்கள் சொன்னீர்கள். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்துக்குள் நுழையும் போது அரசியல் சாசனத்தை குனிந்து தலைவணங்கியதைப் பார்த்து மகிழ்ந்தேன். அப்போது எங்களுக்கு பெருமிதமாக இருந்தது; அரசியல் சாசனத்தை எந்த ஒரு சக்தியுமே அசைத்துப் பார்க்க முடியாது என்பதை நாட்டு மக்களும் காங்கிரஸும் பிரதமர் மோடிக்கு விளக்கமாக சொல்லிவிட்டது உணர முடிந்தது. உங்களால் அரசியல் சாசனத்தை ஒரு போதும் திருத்திவிட முடியும் என கனவிலும் நினைக்க முடியாது; இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.












Click it and Unblock the Notifications