ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து பேச்சு.. நிர்மலா சீதாராமனுடன் அமெரிக்க துணை நிதி அமைச்சர் சந்திப்பு!
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், அமெரிக்க துணை நிதி அமைச்சர் சந்தித்து பேசினார். உக்ரைன் ரஷ்யா விவகாரம், இந்தியா-அமெரிக்கா உறவு உள்ளிட்டவை குறித்து இந்த சந்திப்பின் போது பேசப்பட்டது.
அமெரிக்காவின் துணை நிதி அமைச்சர் வல்லி அடேயமோ இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த நிலையில், வல்லி அடையேமோ மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்து இருக்கலாம் என்று தெரிகிறது.

உக்ரைன் நெருக்கடி
குறிப்பாக உணவு பாதுகாப்பின்மை, எரிசக்தி விலைகள், உக்ரைன் நெருக்கடி உள்ளிட்டவை இவர்களின் ஆலோசனையில் முக்கிய அஜெண்டாவாக இடம் பெற்று இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. நிர்மலா சீதாராமனை தவிர பிரதமரின் முதன்மை செயலர் பிகே மிஸ்ரா, நிதி அமைச்சக செயலர் அஜய் சேத், வெளியுறவுத்துறை செயலர் விஜய் க்வத்ரா மற்றும் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு துறை செயலர் பங்கஜ் ஜெயின் ஆகியோரையும் அமெரிக்க துணை நிதி மந்திரி சந்தித்துப் பேசினார்.

உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர..
உயர் அதிகாரிகளுடனான இந்த ஆலோசனையின் போது சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சினைகள் குறித்து விவாதித்து இருக்கலாம் என்று தெரிகிறது. சர்வதேச அளவில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்கு கொண்டு வருவது மிகவும் முக்கியமானது என்றும் அமெரிக்க துணை நிதி அமைச்சர் கூறினார். மேலும், அமெரிக்க நிதி அமைச்சர், ஜேனட் யெலனின் கருத்தையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வலுப்படுத்த வேண்டும்
காலப்போக்கில் புதைபடிவ எரிபொருளுக்கான தேவையை குறைத்து புதுப்பித்தக்க எரிசக்திக்கான ஆதாரம் கிடைப்பதை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் இந்தியா - அமெரிக்கா ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் அமெரிக்க துணை நிதி அமைச்சர் வலியுறுத்தி காட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா அமெரிக்கா இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த வேண்டியதின் அவசியத்தை சுட்டிக்காட்டிய துணை நிதி அமைச்சர், இந்தியா- அமெரிக்கா இடையே ஏற்கனவே குவாட் மற்றும் இந்தோ- பசுபிக் பொருளாதார கட்டமைப்பு என வலுவான உறவுகள் இருந்தாலும் இதை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சீனாவின் ராணுவ அச்சுறுத்தல்
இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ அச்சுறுத்தல் ஒருபக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா அமெரிக்கா உள்ளிட்ட மேலும் சில பலம் மிக்க நாடுகள் இந்த பிராந்தியத்தில் எளிதான வர்த்தகத்தை உறுதி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து பேசி வருகின்றன. தென் சீனக்கடல் முழுவதையும் சீனா தனக்கு சொந்தம் என உரிமை கொண்டாடி வருகிறது. தைவான், பிலிப்பைன்ஸ், புருனே, மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளும் தென் சீனக்கடலில் தங்களுக்கு உரிமை இருப்பதாக கூறி வருகின்றன. சீனாவோ, தென் சீனக்கடலில் செயற்கை தீவுகளையும் ராணுவ கட்டமைப்புகளையும் நிறுவி வருவது அந்த பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications