"ரத்தன் டாடா உயிரோடு இருந்திருந்தால்.." இழப்பீடு தராமல் இழுத்தடிக்கும் ஏர் இந்தியா.. பயணிகள் வேதனை
டெல்லி: கடந்த ஜூன் மாதம் ஏர் இந்தியா நடந்த விபத்தில் உயிரிழந்தோருக்கு இதுவரை இழப்பீடு தொகை முழுமையாக வழங்கப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் இழப்பீடு தொகை வழங்கத் தாமதம் நிலவுவதைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ரத்தன் டாடா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், இதுபோன்ற காலதாமதம் இருந்திருக்காது என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஜூன் 12ம் தேதி போயிங் 787-8 வகை ஏர் இந்தியா AI171 விமானம், அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர்.

பயணிகள் வேதனை
இதற்கிடையே இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இன்னும் முழுமையான நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட 65க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்காக வாதிடும் அமெரிக்காவைச் சேர்ந்த தலைமை வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார். மேலும், ரத்தன் டாடா உயிரோடு இருந்திருந்தால், இதுபோன்ற நடைமுறைகள் இருந்திருக்காது என்றும் வழக்கறிஞர் மைக் ஆண்ட்ரூஸ் குறிப்பிட்டார். இழப்பீடு தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பயணிகளும் வேதனை அடைந்துள்ளனர்.
ரத்தன் டாடா
இது தொடர்பாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ஆண்ட்ரூஸ், ரத்தன் டாடா இருந்திருந்தால் துயரில் இருக்கும் குடும்பங்கள் எதிர்கொள்ளும் இந்தத் தடைகள் இருந்திருக்காது என்றார். அவர் மேலும் கூறுகையில், "ரத்தன் டாடா யார் என்பது அமெரிக்காவில் கூட எங்களுக்குத் தெரியும். அவரது உழைப்பு, பணிவு மற்றும் ஊழியர்களின் நலனில் அவர் காட்டிய அக்கறை ஆகியவை பற்றி அமெரிக்காவில் நாங்கள் அறிந்திருக்கிறோம். அவர் இப்போது இருந்திருந்தால், விமானத்தில் இருந்த ஊழியர்களும், பயணிகளும், தரையில் இருந்தவர்களும் இழப்பீடு பெறுவதில் இந்தத் தாமதத்தைச் சந்தித்திருக்க மாட்டார்கள்.
நாங்கள் ஒரு குடும்பத்தைச் சந்தித்தோம். தாய் படுத்த படுக்கையாக இருக்கிறார்.. தனது மருத்துவச் செலவுகளுக்கு மகனின் வருமானத்தை நம்பி இருந்தார். மகன் ஏர் இந்தியா விபத்தில் இறந்துவிட்டார். அவர்களுக்கு இன்னும் இழப்பீடு கிடைக்கவில்லை. இந்த தாய் இப்போது என்ன செய்வார்? அவர் தனது மகனை இழந்துவிட்டார். இப்போது சிகிச்சைக்குப் பணம் கிடைப்பதில் அவர் சிக்கலை எதிர்கொண்டிருக்கிறார். செய்யாத தவறுக்காக தண்டனையை அனுபவித்து வருகிறார்" என்றார்.
தாமதம் ஏன்?
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அளித்திருந்த பேட்டியில் இழப்பீடு தொகை வழங்குவதை ஏர் இந்தியா ஏன் தாமதிக்கிறது என்பதை ஆண்ட்ரூஸ் விளக்கியிருந்தார். அதாவது விமானத்தின் பிளாக் பாக்ஸ் மற்றும் காக்பிட் குரல் பதிவுக் கருவியில் ஆய்வுகள் நடந்து வரும் நிலையில், அதைப் பொறுத்து சட்ட நடவடிக்கைகள் மாறும் என்பதால் இழப்பீடு தொகையைத் தாமதிப்பதாகத் தெரிவித்தார்.
அதாவது FADEC (முழு டிஜிட்டல் எஞ்சின் கட்டுப்பாடு) அமைப்பு அல்லது த்ரோட்டில் கட்டுப்பாடு போன்ற விமானத்தில் உள்ள குறைபாடு காரணமாக விபத்து ஏற்பட்டிருந்தால் இது தொடர்பாக போயிங் மீது வழக்கு தாக்கல் செய்யப்படலாம். அதேநேரம் தவறு ஏர் இந்தியா மீது இருப்பது கண்டறியப்பட்டால் மாண்ட்ரீல் ஒப்பந்தங்கள் கீழ் ஏர் இந்தியா விமான நிறுவனமே எல்லா இழப்பீடுகளையும் வழங்க வேண்டும். ஏர் இந்தியா இன்சூரன்ஸ் எடுத்திருந்ததால் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்த இழப்பீடுகளை வழங்கும்.
இடைக்கால இழப்பீடு
முன்னதாக கடந்த ஜூலை 26ம் தேதி ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்த 229 பயணிகளில் 147 பேரின் குடும்பங்களுக்கும், கல்லூரியில் உயிரிழந்த 19 பேரின் குடும்பங்களுக்கும் தலா ₹25 லட்சம் இடைக்கால இழப்பீட்டை வழங்கியது. இந்தத் தொகை, நிர்ணயம் செய்யப்படும் இறுதி இழப்பீட்டில் சரிசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் நினைவாக 'தி ஏஐ-171 நினைவு மற்றும் நல அறக்கட்டளை'யை டாடா குழுமம் நிறுவியுள்ளது. இந்த அறக்கட்டளை, உயிரிழந்த ஒவ்வொரு நபருக்கும் ₹1 கோடி நிவாரணத் தொகையை வழங்குவதாக உறுதிபூண்டுள்ளது. மேலும் விபத்தில் சேதமடைந்த பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி உள்கட்டமைப்பை மீண்டும் கட்டவும் இதர உதவிகளைச் செய்வதாகவும் ஏர் இந்தியா உறுதி செய்துள்ளது.












Click it and Unblock the Notifications