"இந்தியாவுடன் எப்போதும் துணை நிற்போம்.." ராஜ்நாத் சிங்கிடம் உறுதியளித்த அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்
டெல்லி: பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் மத்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வியாழக்கிழமை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்குத் துணையாக அமெரிக்கா நிற்கும் என அமைச்சர் பீட் உறுதியளித்தார்.
காஷ்மீரின் பஹல்காமில் நேற்று நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த தாக்குதலைப் பல்வேறு உலக நாடுகளும் கண்டித்து வருகின்றன. மேலும், தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடும் இந்தியாவுக்கு ஆதரவாக நிற்பதாகப் பல்வேறு நாடுகளும் தங்கள் சப்போர்ட்டை அளித்து வருகிறார்கள்.

ராஜ்நாத் சிங்
இதற்கிடையே இன்று வியாழக்கிழமை, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்துடன் உரையாடினார். அப்போது தன்னை தற்காத்துக் கொள்ள இந்தியாவுக்கு முழு உரிமை இருப்பதாகவும் அதை அமெரிக்கா ஆதரிக்கும் என்றும் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் உறுதியளித்தார்.
இருவருக்கும் இடையே உரையாடல் நடந்ததைப் பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தனது ட்விட்டரில், "அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் இன்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பேசினார். அப்போது காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததற்குத் தனது ஆழ்ந்த இரங்கலை பீட் தெரிவித்தார்.
அமெரிக்கா ஆதரவு
அமெரிக்கா இந்தியாவுடன் ஒற்றுமையாக நிற்கிறது என்றும் தன்னை தானே தற்காத்துக் கொள்ளும் இந்தியாவின் உரிமையை ஆதரிப்பதாகவும் அமைச்சர் பீட் ஹெக்செத் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் அமெரிக்க அரசின் வலுவான ஆதரவு இருக்கும் என்பதை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்த உரையாடலின் போது பாகிஸ்தான் கடந்த காலங்களிலும் பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்து, பயிற்சி அளித்து, நிதியளித்து வந்துள்ளதாக அமைச்சர் பீட்டிடம் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். இதுபோன்ற கொடூரமான பயங்கரவாதச் செயல்களை உலக சமூகம் வெளிப்படையாகவும், சந்தேகத்திற்கு இடமின்றியும் கண்டித்து, குரல் கொடுக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் கூறினார்" என்று அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா சரியான பதிலடி
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து எல்லையில் பதற்றம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அமைதி ஒப்பந்தத்தை மீறும் வகையில் எல்லையில் துப்பாக்கிச் சூடுகளை நடத்தி வருகிறது. இதனால் நேற்றைய தினம் இந்தியா மற்றும் பாகிஸ்தானின் ராணுவ ஜெனர்கள் உரையாடினர்.. அப்போது எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் விதிமீறல்கள் குறித்து இந்தியா எச்சரித்து இருந்தது.
ஜம்மு காஷ்மீரில் குப்வாரா மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுக்குக் கடந்த ஏப்ரல் 27-28 தேதிகளில் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் சிறிய தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுத்திருந்தது. இந்தச் சூழலில் தான் இந்தியாவுக்குத் தன்னை பாதுகாத்துக் கொள்ளும் உரிமை இருப்பதாகவும் அதை அமெரிக்கா ஆதரிக்கும் என்றும் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் கூறியிருக்கிறார்.
அமைச்சர் ஜெய்சங்கர்
முன்னதாக நேற்று புதன்கிழமை, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உரையாடினார். இது தொடர்பாக ஜெய்சங்கர் தனது ட்விட்டரில், "பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் உரையாடினேன். இதற்குக் காரணமானவர்கள், இதை ஆதரித்தவர்கள் மற்றும் திட்டம் போட்டுத் தந்தவர்கள் என அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்" என்று பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications