உச்சநீதிமன்ற 49வது தலைமை நீதிபதியாக, பதவியேற்றார் யு.யு.லலித்! பதவிபிரமாணம் செய்து வைத்தார் ஜனாதிபதி
டெல்லி: நாட்டின் 49வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பதவியேற்றுள்ளார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ஏ.பாப்டேவுக்கு பின் என்.வி.ரமணா அந்த பொறுப்புக்கு வந்தார். கடந்த 16 மாதங்களாக உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த என்.வி.ரமணாவின் பதவிக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதனால் சில வாரங்களுக்கு முன்னதாகவே உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடைமுறைகள் தொடங்கப்பட்டன. மரபுப்படி அப்போதைய தலைமை நீதிபதியே புதிய தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.

யுயு லலித்
இதன்படி சீனியாரிட்டி அடிப்படையில் நீதிபதி உதய் உமேஷ் லலித் எனும் யு.யு.லலித்தை புதிய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்று நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனமிக்கப்படும் அறிவிப்பை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளியிட்டார்.

74 நாட்கள்
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, யு.யு. லலித்துக்கு தலைமை நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் நீதிபதி யு.யு.லலித் பதவிக் காலம் வரும் நவம்பர் 8ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனால் மொத்தம் 74 நாட்கள் மட்டுமே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பதவி வகிப்பார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பின்னணி என்ன?
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1957ம் ஆண்டு பிறந்தவர் யு.யு.லலித். 1983-ம் ஆண்டு முதல் நீதித்துறையில் பணியாற்றி வருகிறார். தொடக்கத்தில் மும்பையிலும் பின்னர் டெல்லியிலும் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். பின்னர் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதியானார். இவரின் தந்தை மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியவர்.

முக்கிய வழக்குகள்
நாட்டில் பெரும் பரபரப்பை கிளப்பிய ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பில் அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக யு.யு.லலித் பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications