ஆஹா.. சீக்கிரமே குறையும் வந்தே பாரத் டிக்கெட் விலை? ரயில்வே அமைச்சர் சொன்ன பதில்.. நோட் பண்ணுங்க
டெல்லி: இந்தியாவில் பிரீமியம் ரயில்களில் ஒன்றாக வந்தே பாரத் இருக்கிறது. நமது நாட்டின் முக்கிய ரூட்களில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதேநேரம் வந்தே பாரத் ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் கூறும் சூழலில், அதன் விலையைக் குறைக்கும் திட்டம் இருக்கிறதா என்பது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார்.
இந்தியா மிக விரிவான ஒரு ரயில் சேவையைக் கொண்ட நாடாக இருக்கிறது. நாட்டின் பெரும்பாலான இடங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு ரயில் மூலமாகவே செல்கிறார். இருக்கை இடம் பெரியது, டாய்லெட் வசதி, படுத்துத் தூங்கிக் கொண்டே செல்லலாம் எனப் பல வசதிகள் இருப்பதால் மக்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களையே விரும்புகிறார்கள்.

வந்தே பாரத்
அதேநேரம் இந்திய ரயில்களில் அதிநவீன வசதிகள் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே வந்தே பாரத் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. கிட்டதட்ட விமானத்தில் இருப்பது போன்ற வசதிகளுடன் வந்த வந்தே பாரத் ரயில்களுக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு இருந்தது. முக்கியமான ரூட்களில் வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
ஆனாலும், வந்தே பாரத் ரயில்களின் டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக மக்கள் பலரும் கூறும் நிலையில், இதற்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துள்ளார். ரயிலை இயக்க ஆகும் செலவுகள், விலைவாசி மற்றும் சமூக-பொருளாதார சூழல் எனப் பல காரணங்களைக் கருத்தில் கொண்டே ரயில் டிக்கெட்கள் விலை நிர்ணயம் செய்யப்படுவதாக அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டார்.
அஸ்வினி வைஷ்ணவ் பதில்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் எம்பி ரகிபுல் உசேன் இது குறித்த கேள்வியை எழுப்பிய நிலையில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதற்கு எழுத்துப்பூர்வ பதிலை அளித்தார். பிரீமியம் ரயில் சேவையைக் குறைந்த வருமானம் கொண்ட மக்களும் அணுகும் வகையில் வந்தே பாரத் ரயில்களின் டிக்கெட்களை குறைக்கும் திட்டம் அரசுக்கு உள்ளதா என ரகிபுல் உசேன் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ், "பல்வேறு தரப்பு மக்களும் ரயில் சேவையைப் பயன்படுத்தும் வகையில் இந்திய ரயில்வே பல்வேறு ரயில் சேவைகளை இயக்குகிறது.. ரயிலில் உள்ள வசதிகளின் அடிப்படையில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது. சேவை தரத்தைப் பராமரிப்பு செய்யும் அதே வேளையில் டிக்கெட் விலையும் அதிகமாக இல்லை என்பதை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
வேறு ரயில்கள் இருக்கு
குறைந்த கட்டணத்தில் உயர்தர ரயில் சேவைகளை வழங்க அமிர்த பாரத் ரயில்களை அறிமுகப்படுத்தியுள்ளோம். இவை ஏசி அல்லாத ரயில்கள் ஆகும். இந்த ரயில்களில் 12 ஸ்லீப்பர் வகுப்பு மற்றும் 8 பொது வகுப்பு பெட்டிகள் உள்ளன. குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும். இந்த ரயில்களிலும் நாங்கள் பல நவீன வசதிகளைக் கொண்டு வந்துள்ளோம். குறைந்த கட்டணத்தில் பயணிகள் சவுகரியமாகப் பயணிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
இந்தியாவில் தான் கம்மி
முன்னதாக இந்திய ரயில்வே டிக்கெட் கட்டணத்தை அவர் அண்டை நாடுகளின் ரயில் டிக்கெட் கட்டணங்களுடன் ஒப்பிட்டும் விளக்கினார். இந்தியாவில் ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் 350 கிமீ பயணிக்க ரூ.121 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் பாகிஸ்தானில் இதே தூரம் பணிக்க 400 ரூபாயும் இலங்கையில் 413 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், மேற்குலக நாடுகளில் இந்தியாவைக் காட்டிலும் ரயில் டிக்கெட் கட்டணம் 10 முதல் 20 மடங்கு அதிகமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2020க்கு பிறகு இந்தியாவில் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், நமது நாட்டில் ஒரு பயணி ரயிலில் ஒரு கி.மீ பயணிக்க ரூ.1.38 செலவாகும் போதும், ரயில்வே துறை அவர்களிடம் இருந்து 72 பைசா மட்டுமே வசூலிப்பதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications