துணை வேந்தர் நியமன மசோதா.. ஒப்புதல் அளிப்பதை விட ஆளுநருக்கு வேறு வாய்ப்பு இல்லை - உச்சநீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: துணை வேந்தர் நியமன மசோதாவை நிறுத்தி வைக்கும் ஆளுநர் அதுபற்றி விளக்கம் அளிக்காவிட்டால் அவர் மனதில் இருப்பது எப்படி தெரியும்? மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதை விட வேறு வழியில்லை என்று கூறி வழக்கு விசாரணையை பிப்ரவரி 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் எனவும், பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க கோரி இடையூறு ஏற்படுத்துகிறார் என்றும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

supreme court tamilnadu rn ravi

இந்த மனுக்கள் கடந்த ஜனவரி 27 ம்தேதி விசாரணை நடந்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை பிப்ரவரி 4 மற்றும் நேற்று முன்தினம் உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.

மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, அபிேஷக் மான்வி சிங்கி மற்றும் வில்சன் ஆகியோர் தமிழக அரசு சார்பில் ஆஜராகினர். ஆளுநர் ஆர்என் ரவி மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவர் அரசியலமைப்பு சட்ட பிரிவு 200யை மீறுகிறார் என்று கூறினர். ஆளுநர் ஆர்என் ரவி ஒருமுறை மசோதாவை திருப்பி அனுப்பினால் மீண்டும் சட்டசபையில் இயற்றி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். 2வது முறை கண்டிப்பாக ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். ஆனால் ஆளுநர் ஒப்புதல் தருவது இல்லை என்று வாதிட்டனர்.

ஆளுநர் ரவி எந்த அடிப்படையில் முடிவெடுக்கிறார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய 14 மசோதாக்களில் இரண்டை மட்டும் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தது ஏன்? மற்ற 12 மசோதாக்களை 2 ஆண்டுகளாக ஆளுநர் ஆய்வு செய்கிறாரா? மசோதாக்களை ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக ஏன் நிறுத்தி வைத்தார் என்பதை ஆதாரப்பூர்வமாக விளக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

இதையடுத்து இன்று மீண்டும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‛‛ஆளுநர் எதுவும் விளக்கமளிக்காமல் மசோதாவை திரும்ப அனுப்பினால், அவர் மனதில் என்ன இருக்கிறது என்பது எப்படி தெரியும்? சம்மந்தப்பட்ட மசோதாவில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்பதை அவர் தெரிவிக்கவில்லை என்றால் அரசுக்கு எப்படி தெரியும்? சம்மந்தப்பட்ட மசோதா மீது தான் ஒப்புதல் கொடுக்க முடியாது என்பதை எப்படி ஆளுநர் உணர்ந்தார்?
இந்த கேள்விகளுக்கு விளக்கம் அளியுங்கள் என்று கூறினர்.

இதையடுத்து ஆளுநர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவர், ‛‛ துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நடைமுறை மத்திய சட்ட விதிமுறைகளுக்கு எதிராக உள்ளது. அவற்றுக்கு ஆளுநர் எவ்வாறு ஒப்புதல் அளிப்பார்?'' என்றார்.

நீதிபதிகள்:பல்கலைக்கழக மசோதா மத்திய சட்டத்துக்கு எதிராக இருந்தால் அடுத்த நடவடிக்கை என்ன? மாநில அரசு எப்படி செயல்படும் என்று நினைக்கிறீர்கள்? ஆளுநர் அரசுக்கு முட்டுக்கட்டையாக உள்ளார். மசோதா விவகாரத்தில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்க முடியாது.

அட்டர்னி ஜெனரல்: பல்கலைக்கழக செயல்பாடு குறித்து ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற இருந்தது. அதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று சில துணைவேந்தர்களை அரசு அணுகியது. பல்கலைக்கழக மானிய குழு விதிகளின் கீழ் கட்டுப்பட்டு உள்ள துணைவேந்தர்கள் பொறுப்பை ஆக்கிரமிக்க மாநில அரசு முயற்சித்தது. அரசியல் காரணங்களுக்காகவே துணைவேந்தர் மசோதாவை மாநில அரசால் கொண்டு வந்தது.

சில முரணான காரணங்களுக்காக ஒப்புதல் வழங்காமல் இருப்பார் என்றால், அரசு மற்றும் ஆளுநர் என இரு தரப்பும் இணைந்து முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அனுப்பலாம். குறிப்பாக, இதன் மீது முடிவெடுக்க ஜனாதிபதிக்கு அனுப்புங்கள் என்று மாநில அரசே ஆளுநரை கேட்க வைக்கலாம். எனவே இதில் எதுவும் மாநில உரிமையை பறிப்பதாக கருத முடியாது. ஆளுநர் அரசியலமைப்பு பிரிவு 200ல் விதி 1ன் கீழ் முடிவெடுத்தே ஆகவேண்டும் என்று கூறுவது, பிரிவு 200ஐ முரணாக திரித்து கூறுவது போல் ஆளாகிவிடும்.

நீதிபதிகள்: கடந்த 2023ம் ஆண்டு மசோதாக்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு தற்போது வரை ஆளுநர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? 2 ஆண்டுகளாக ஆளுநர் - தமிழக அரசுக்கு இடையே கருத்து பரிமாற்றம் இருந்ததா?

அட்டர்னி ஜெனரல்: இல்லை, மசோதாக்கள் அனுப்பி வைக்கப்பட்ட 2 மாதங்களில் தனது முடிவை தெரிவித்து விட்டார் ஆளுநர். 7 மசோதாக்கள் மீதான ஒப்புதலை நிறுத்தி வைப்பதாக கூறியிருந்தார்.

நீதிபதிகள்: அப்படியென்றால் ஜனாதிபதியும் ஒப்புதலை நிறுத்தி வைக்கிறாரா? ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்தால் அடுத்து என்னாவகும்? முடிவெடுக்காவிட்டால் மசோதா அப்படியே இருக்குமா? என்று கேள்வி எழுப்பினர்.

அட்டர்னி ஜெனரல்: ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதியிடம் உள்ளது என்றால் அதற்கு மேல் யாரிடமும் கேட்க வேண்டியது இல்லை'' என்று கூறினார்.

ஒத்திவைப்பு: இதை கேட்ட நீதிபதிகள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை தவிர, ஆளுநருக்கு வேறு வாய்ப்பை அரசிலமைப்பு சட்டம் வழங்கவில்லை. மசோதாவில் இருக்கும் சட்ட முரண்பாடுகள் பற்றி ஜனாதிபதிக்கு, ஆளுநர் தெரியப்படுத்தி இருக்க வேண்டும் என்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை பிப்ரவரி 10ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அதன்படி வரும் பிப்ரவரி 10ம் தேதி (திங்கட்கிழமை) மீண்டும் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+