வெளிநாடுகளில் இந்தியாவுக்கு எதிராக பேசுவதா? ராகுல் காந்திக்கு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கண்டனம்
டெல்லி: வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவுக்கு எதிராக அவ்வப்போது கருத்துகளை தெரிவிப்பது ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சென்றிருந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் சீக்கியர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படுவதாக விமர்சித்ததை மறைமுகமாக சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவித்துள்ளார் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்.
சர்வதேச ஜனநாயக தினத்தையொட்டி மும்பையில் சம்விதான் மந்திரை (அரசியல் சாசன கோவில்) துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது: பாபா சாஹேப் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது முன்பு வழங்கப்படாமல் இருந்தது; மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை சுமார் 10 ஆண்டுகளாக அமல்படுத்தாமல் இருந்தது போன்றவை கவலை அளித்த விஷயங்கள். வெளிநாட்டு மண்ணில் அவ்வப்போது இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் தெரிவிக்கப்படுவது குறித்து ஆழ்ந்த கவலையைத் தருகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தை ஒரு புத்தகமாகப் பார்க்கக் கூடாது. அரசியலமைப்பு மதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பை புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் கீழ் நாம் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் அதே வேளையில், நமது அரசியலமைப்பு அடிப்படை கடமைகளையும் உள்ளடக்கியது.
இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் கவலை தருகின்றன. ஏனெனில் இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் மனசாட்சி. இடஒதுக்கீடு என்பது சமத்துவத்தை கொண்டு வருவதற்கான உறுதியான நடவடிக்கை .
பாபா சாஹேப் அம்பேத்கருக்கு 1990 மார்ச் 31 அன்று பாரத ரத்னா வழங்கப்பட்டது. இந்த கௌரவம் ஏன் முன்னரே வழங்கப்படவில்லை? சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் வரலாற்றில் இருண்ட காலமான 21 மாத அவசரநிலை குறித்து இளைய தலைமுறையினர் விழிப்புடன் தகவல்களைத் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். அந்த ஒரு குறிப்பிட்ட நாளை ஒருபோதும் மறக்காமல் அதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த 1975 ஜூன் 25 ஒரு கருப்பு நாள். சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் இருண்ட அத்தியாயம் அது. நமது ஜனநாயகத்தின் இருண்ட காலமான அவசர நிலை தொடர்பான அறிவு அரசியலமைப்பைப் பாதுகாக்கும் வலிமையை வழங்கும். இதைக் கருத்தில் கொண்டு, 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 அன்று அரசியலமைப்பு தினம் கொண்டாடப்படுகிறது. ஜூன் 25 ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அவசர நிலையின்அந்த 21 மாதங்களில் என்ன நடந்தது என்பதை நினைவில் கொள்வது மிகவும் முக்கியம். இவ்வாறு துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உரையாற்றினார்.












Click it and Unblock the Notifications