ராஜா ராஜாதான்.. பேரை சொன்னாலே அதிருதே.. இளையராஜாவுக்கு ராஜ்யசபாவில் துணை ஜனாதிபதி புகழாரம்!
டெல்லி: சிம்பொனி இசையமைத்த முதல் இந்தியரான இசைஞானி இளையராஜாவுக்கு நாடாளுமன்றத்தின் ராஜ்யசபாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் புகழாரம் சூட்டினார்.
இளையராஜாவை கவுரவிப்பது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன். 50 ஆண்டுகளாக இசைத்துறையில் பணியாற்றி இந்திய சினிமாவை வடிவமைத்த பழம் பெரும் கலைஞராக திகழ்கிறார். இளையராஜா, இசைஞானி என போற்றிப் புகழப்படுகிறார்.

இசைத்துறையின் மிகப் பெரிய ஆளுமையாக திகழ்கிறார் இளையராஜா. தற்போதைய இசை, பாரம்பரிய இசை ஆகியவற்றை இணைத்து தலைமுறைகளுக்கு அப்பாலும் நிற்கக் கூடிய இசையை நமக்கு வழங்கியவர் இளையராஜா. காலத்தால் அழியாத எண்ணற்ற இசைப்பாடல்களை நமக்கு வழங்கி இருக்கிறார் இளையராஜா.
இளையராஜாவின் இசை என்பது நம்முடைய உணர்வுகளுடன் இணைந்த ஒன்று. இசைஞானி இளையராஜா, 8,600 பாடல்களுக்கு இதுவரை இசையமைத்துள்ளார். உலகத்திலேயே 1,523 திரைப்படங்களுக்கு இசையமைத்த ஒரே நபர் இளையராஜா. , மொத்தம் 9 மொழிகளின் திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

இளையராஜாவின் ஒப்பற்ற இசைத்துறை பணிக்காக பல்வேறு சிறப்புகள், கவுரவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் நாட்டின் 5 தேசிய விருதுகளும் அடங்கும். இதில் 3 விருதுகள் சிறந்த இசையமைப்பாளருக்கானவை. சிறந்த பின்னணி இசைக்காக 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
லண்டன் டிரினிட்டி இசைக் கல்லூரியில் கிடார் இசை வாசிப்பில் தங்கப் பதக்கம் வென்றவர் இளையராஜா. இதன் மூலம் இந்திய இசைக்கு உலக அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தார். 2010-ல் நமது நாட்டின் உயரிய விருதுகளின் ஒன்றாக பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு பத்ம விபூஷண் விருதும் வழங்கப்பட்டது. இசை மரபுக்காக 2022-ம் ஆண்டு பிரதமர் மோடியிடன் சிறப்பு முனைவர் பட்டமும் பெற்றார் இளையராஜா.
கடந்த மார்ச் 8-ந் தேதி லண்டனில் வேலியன்ட் என்ற பெயரில் ஆங்கில சிம்பொனி இசையை நேரலையில் தொகுத்து பதிவு செய்து அரங்கேற்றம் செய்துள்ளார் இளையராஜா. இத்தகைய சிம்பொனி இசை சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர் இளையராஜா. 34 நாட்களில் சிம்பொனி இசையை இசையமைத்தார். இளையராஜாவின் இந்த பணியால் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது. அவரது திறமையை பறைசாற்றுகிற மற்றொரு சான்றாக சிம்பொனி திகழ்கிறது. 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் ராஜ்யசபாவின் நியமன எம்பியாக இருக்கிறார் இளையராஜா. அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம். இவ்வாறு ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.
பெரியண்ணா வணக்கம்
இதனைத் தொடர்ந்து பேசிய சமாஜ்வாதி கட்சி ராஜ்யசபா எம்பி, ஜெயாபச்சன், இளையராஜாவை "பெரியண்ணா வணக்கம்" என குறிப்பிட்டு வாழ்த்தினார்.












Click it and Unblock the Notifications