3 நாட்களுக்கு பின் 5-ம் கட்ட தேர்தல் வாக்குப் பதிவு விவரத்தை அறிவித்த தேர்தல் ஆணையம்!
டெல்லி: 5-வது கட்ட லோக்சபா தேர்தலில் 62.2% வாக்குகள் பதிவாகி இருப்பதாக 3 நாட்களுக்குப் பின்னர் இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
18-வது லோக்சபா தேர்தல் இதுவரை 5 கட்டங்களாக நடைபெற்றுள்ளது. 5-வது கட்ட தேர்தல் மே 20-ந் தேதி 8 மாநிலங்களின் 49 தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு 94,732 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது. 9.47 லட்சம் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 5-ம் கட்ட தேர்தலில் 8.95 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்களாக இடம் பெற்றிருந்தனர்.
5-வது கட்ட லோக்சபா தேர்தலில் மே 20-ந் தேதி இரவு 11.30 மணி வரையிலான தரவுகள் அடிப்படையில் மொத்தமே 60.09% வாக்குகள்தான் பதிவாகி இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. மேலும் "தரவுகள் கள அலுவலரால் கணினிகளில் நிரப்பப்படும் தகவல்களின்படி உள்ளன. இது தோராயமானதாகும். ஏனெனில் சில வாக்குச் சாவடிகளின் (பி.எஸ்) தரவு நேரம் எடுக்கும், மேலும் இந்த வாக்குப்பதிவு சதவீதம் அஞ்சல் வாக்குச்சீட்டை உள்ளடக்காது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் இறுதிக் கணக்கு படிவம் 17சி-ல் வாக்குப்பதிவு முடிவில் அனைத்து வாக்குச்சாவடி முகவர்களுடனும் பகிரப்படுகிறது" எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
தற்போது அதாவது வாக்குப் பதிவு முடிந்த 3 நாட்களுக்கு பின்னர் மே 20-ந் தேதி பதிவான வாக்குகள் இறுதி விவரத்தை இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில், தற்போது நடைபெற்றுவரும் 2024 பொதுத்தேர்தலின் 5-ம் கட்டத்தில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 20.05.2024 தேதியிட்ட இரண்டு செய்திக்குறிப்புகளின் தொடர்ச்சியாக, வாக்காளர்கள் வருகை 62.2% ஆகப் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்கள் வாரியாக 5-ம் கட்ட தேர்தல் இறுதி வாக்குப் பதிவு நிலவரம்
பீகார் 56.76%
ஜம்மு காஷ்மீர் 59.10%
ஜார்க்கண்ட் 63.21%
லடாக் 71.82%
மகாராஷ்டிரா 56.89%
ஒடிஷா 73.50%
உ.பி. 58.02%
மேற்கு வங்கம் 78.45%












Click it and Unblock the Notifications