வக்பு சொத்தாக உள்ள இடுகாடுகளை கூட அரசு எடுத்துக்கொள்ள முடியும்.. கபில் சிபல் வைத்த பரபர வாதம்!
டெல்லி: "பிரச்சனையை தீர்க்கும் வரை அரசு சொத்தாக கருதப்படும் என வக்பு திருத்தச் சட்டத்தில் உள்ளது. இதன்படி 200 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இடுகாடுகளைக் கூட அரசு எடுத்துக் கொள்ள முடியும்." என மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் இன்று உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை வைத்துள்ளார்.
வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. அப்போது வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதங்களை அடுக்கினார்.

மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிராக 70க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு விசாரித்தது. அவர் ஓய்வு பெற்ற நிலையில், சுப்ரீம் கோர்ட் புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக இந்த வழக்கில் வாதங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. புதிய வக்பு சட்டத்துக்கு ஆதரவான மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி மற்றும் ரஞ்சித் குமார் ஆகியோர் வாதிட்டனர். வக்ஃபு திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
அப்போது, "வக்ஃபு சொத்து தொடர்பாக ஒரு பிரச்சனை எழும்போது முதலில் அந்த சொத்து பிரச்னைக்கு விடை காணும் வரை அந்த சொத்து வக்பு சொத்தாக கருதப்படாது என்று அறிவிக்கப்படும். அதே வேளையில் அந்த காலகட்டத்தில் அந்த சொத்து என்பது அரசு சொத்தாக கருதப்படும் என புதிய சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எவ்வளவு கால அளவுக்குள்ளாக அந்த சொத்து மீது முடிவெடுக்க வேண்டும் என்ற அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற எந்த ஒரு நிர்ணயமும் இல்லை.
அந்த சொத்து மீது முடிவெடுக்கும் வரை காலவரையின்றி அவ்வாறு வக்ஃபு என்ற அந்தஸ்தை இழந்து விடும். எந்த ஒரு நிலத்தையும் அரசு தன்னுடையது என கூறி எடுத்துக் கொள்ளும் ஒரு நிலையை இந்த புதிய சட்டம் வழிவகை செய்துள்ளது. அதன்படி வக்ஃபு சொத்தாக 200 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டு வரும் இடுகாடுகளை கூட அரசு தனது நிலம் என்று கூறி எடுத்துக் கொள்ள முடியும்." என வாதங்களை வைத்தார்.
தொடர்ந்து மத்திய அரசு தரப்பில், "புதிய வக்ஃபு சட்டத்தை பொறுத்தவரை எந்த அரசமைப்பு மீறலும் இல்லை. வக்ஃப் சொத்து மீது அரசு நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றங்களை நாட வழி உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications