இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன?
டெல்லி: வளைகுடா போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடரும் நிலையில், அது சர்வதேச அளவில் எரிசக்தி விநியோகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே நிலைமை மோசமாகிக் கொண்டே போவதால் இந்தியாவில் போர் எமர்ஜென்சி ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக இணையத்தில் தகவல் பரவியது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அமெரிக்கா- ஈரான் மோதல் காரணமாக உலகெங்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் பதற்றமும், எதிர்பாராத நிகழ்வுகளுக்கு மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக ஏற்கனவே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

எனர்ஜி பற்றாக்குறை?
மேலும், போர் தொடர்பாக பல்வேறு தகவல்களும் இணையத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வரலாம் என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இதனால் மக்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு பெட்ரோல், டீசலை வாங்கினார்கள். இதனால் சில நாட்களுக்கு பெட்ரோல் டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதற்கிடையே நேற்றைய தினம் இணையத்தில் மற்றொரு தகவல் பரவியது. அதாவது இந்த மத்திய கிழக்கு மோதல் காரணமாகப் போர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல் பரவியது. இதற்காக "war lockdown" என்ற பெயரில் PDF ஒன்றும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
போர் ஊரடங்கு?
ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் போர் காரணமாக ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டைச் சமாளிக்க சில கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தன. அதேபோல பிலிப்பைன்ஸ் நாடு எனர்ஜி எமர்ஜென்சியை அறிவித்து இருந்தது. அப்போதே வேறு சில நாடுகளும் கூட இதுபோல எமர்ஜென்சியை அறிவிக்கலாம் எனச் சொல்லப்பட்டது. இது மட்டுமில்லை.. சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் பிரதமர் மோடி, கொரோனா போன்ற ஒரு சூழல் வந்தாலும் அதைக் கையாள தயாராக இருக்க வேண்டும் என்பது போலப் பேசியிருந்தார். இதனால் ஊரடங்கு என்ற PDFஐ பார்த்தவுடன் மக்கள் பதறினார்கள்.
கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா காரணமாக ஏற்பட்ட ஊரடங்கு இன்னுமே மக்களிடம் இருந்து விலகவில்லை. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முதலில் 3 வாரங்களுக்குப் போடப்பட்ட ஊரடங்கு பிறகு இந்தியாவில் பல முறை நீடிக்கப்பட்டது. நடுவில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கூட மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பப் பல வாரங்கள் ஆனது. இதனால் மீண்டும் அதேபோன்ற ஒரு ஆபத்து ஏற்படுமோ என மக்கள் அஞ்சினார்கள்.
அதிர்ச்சி
பதறிப் போய் அந்த PDFஐ திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சியும் சிரிப்புமே வந்துள்ளது. நேற்று ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், யாரோ ஒருவர் விளையாட்டுத்தனமாக இந்த 'போர் ஊரடங்கு PDF' உருவாக்கியுள்ளார். அதைத் திறந்து பார்த்தால் கோமாளி போட்டோ மட்டுமே இருக்கிறது. இதுதான் நேற்று முதலே இணையத்தில் டிரெண்டில் உள்ளது. எனவே, இந்த அறிவிப்பைப் பார்த்தால் ஜாலியாக சிரித்துவிட்டுக் கடந்துவிடலாம்.. இதில் சீரியஸாக யோசிக்க எதுவும் இல்லை.
மத்திய அரசு
அதேநேரம் மத்திய அரசு ஊரடங்கிற்கு வாய்ப்பே இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறிவிட்டது. ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் கூட இல்லை என்றும் கூறிவிட்டது. பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி போதியளவு கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கில் இருந்து டேங்கர் கப்பல்களைப் பாதுகாப்பாக அழைத்து வரும் முயற்சிகளிலும் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications