இதுவரை வெல்லாத இடங்களில் எல்லாம் வென்று.. 2024 தேர்தலில் புதிய ரெக்கார்ட் படைப்போம்.. பிரதமர் மோடி
டெல்லி: எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, இதுவரை வெல்லாத இடங்களில் எல்லாம் வென்று 2024 தேர்தலில் புதிய ரெக்கார்ட் படைப்போம் என்று பேசியுள்ளார்.
மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை மற்றும் பெண்களுக்கு நேர்ந்த கொடூரம் உள்ளிட்டவை தேசத்தையே உலுக்கியது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் பிரதமர் மோடி மணிப்பூர் வன்முறை பற்றி நாடாளுமன்றத்தில் எதுவும் இதுவரை எதுவும் கூறவில்லை.

எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி எம்பிக்கள் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி இதுபற்றி பேச வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தனர். 50 எம்பிக்களின் ஆதரவு இருந்ததால் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு சபாநாயகரும் ஒப்புதல் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை மக்களவையில் அதன் மீதான விவாதம் தொடங்கியது. காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார். இரண்டு நாட்களாக நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவதம் நடைபெற்றது. நேற்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி உள்ளிட்டோர் விவாதத்திற்கு பங்கேற்று பேசினர். இந்த நிலையில், இன்று 4.30 மணியளவில் பிரதமர் மோடி தனது பதிலுரையை பேச ஆரம்பித்தார். பிரதமர் மோடி பேசியதாவது:-
முந்தைய சாதனைகளை எல்லாம் முறியடித்து மீண்டும் மிகப்பெரும் வெற்றியை தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக பெறும் என்பதை நீங்கள் ( எதிர்க்கட்சிகள்) முடிவு செய்துள்ளதை இன்று நான் பார்க்கிறேன். இதுவரை வெல்லாத இடங்களில் எல்லாம் வென்று 2024 தேர்தலில் புதிய ரெக்கார்ட் படைப்போம். எங்கள் அரசின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
இன்று நாட்டு மக்களுக்கு எனது நன்றியை தெரிவிக்க இங்கு வந்துள்ளேன். கடவுள் எங்கள் மீது மிகவும் அன்பு கொண்டுள்ளார். ஏதாவது ஒரு வழியில் எங்களிடம் பேசுகிறார். 2018 ஆம் ஆண்டு நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது, நம்பிக்கை வாக்கெடுப்பு இல்லை என்றும் இது அவர்களுக்கான வாக்கெடுப்பு எனவும் கூறினேன். வாக்கெடுப்பின் முடிவில் அவர்கள் தோற்று போனார்கள். என்றார்.












Click it and Unblock the Notifications