ஹிஜாப் வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் விவாதமான “பூணூல்”! உள்ளே இருப்பதால் தவறில்லை - நீதிபதி குப்தா
டெல்லி: பூணூல் என்பது சட்டைக்கு உள்ளே இருப்பதால் அது பள்ளியின் ஒழுக்கத்தை மீறும் செயலாகாது என ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா கருத்து தெரிவித்து இருக்கிறார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள அரசு PU கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய மாணவிகள் 6 பேர் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால் ஒரு மாதத்துக்கும் மேலாக வகுப்பறைக்கு வெளியே அமர வைக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணியக்கூடாது என்றும் சீருடையை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டது.

போராட்டம்
அதனை அடிப்படையாக கொண்டே மாணவிகளை அனுமதிக்கவில்லை என கல்லூரி நிர்வாகம் விளக்கமளித்தது. இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மாணவிகள் வழக்கு தொடர்ந்தனர். குந்தபுராவில் உள்ள கல்லூரி ஒன்றில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்து ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினர் காவித் துண்டு அணிந்து வகுப்புக்கு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடகா உயர்நீதிமன்றம்
இதனால் அந்த கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து சென்ற மாணவிகள் வெளியேற்றப்பட்டனர். இந்த பிரச்சனையும் போராட்டமும் மற்ற கல்லூரிகளுக்கும் பரவி கர்நாடகாவே வன்முறைக் களமாக மாறியது. இந்த நிலையில் உடுப்பி மாணவிகள் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து

வழக்கு தள்ளுபடி
இண்ட்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மாணவி தரப்பு வழக்கறிஞர் காமத், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் குப்தா, மத உரிமையை பள்ளி வரை எடுத்துச் செல்லலாமா என்று கேள்வி எழுப்பினார்.

வழக்கறிஞர் வாதம்
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்தது. அப்போது நீதிபதி ஹேமந்த் குப்தா, "மற்றவர்கள் பள்ளியில் சீருடை அணிந்திருக்கும்போது, தலையில் முக்காடு அணிகிறார்கள்." என்று கூறினார். அப்போது வழக்கறிஞர் காமத், தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு செல்லும்போது சந்தியா வந்தனம், பூணூல், ருத்ராக்ஷ போன்றவற்றை அணிவதாக தெரிவித்தார்.

பூணூல் விவாதம்
அப்போது குறிக்கிட்ட நீதிபதி ஹேமந்த் குப்தா, "பூணூல் என்பது சட்டைக்கு உள்ளே இருக்கிறது. யாரும் நமது சட்டையை கழற்றி உள்ளே இருப்பதை பார்க்க மாட்டார்கள். பூணூல் அணிவது பள்ளியின் ஒழுக்கத்தை மீறும் செயலாகாது. மதசார்பின்மை என்ற வார்த்தை உண்மையான அரசியலமைப்பில் இடம்பெறவில்லை." என்றார். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை நாளை காலை 11:30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications