மத்திய அரசின் சாதனைகள் என்னென்ன? நாடாளுமன்றத்தில் பட்டியலிட்ட ஜனாதிபதி! உரையின் விவரம்
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கிடையே அவர் உரையாற்றினார். அப்போது அவர், ஊழல் இல்லா ஆட்சி, வேகமான வளர்ச்சி, சாதனை உணவு உற்பத்தி, கிராமப்புற சாலை மேம்பாடு, காப்பீட்டு திட்டங்கள், ஏஐ தவறான பயன்பாட்டின் அபாயம், போலி தகவல் அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு கடும் பதிலடி குறித்து வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஜனாதிபதி உரையுடன் கூட்டம் தொடங்கியது. ஜனாதிபதி உரையை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் முழக்கம் இட்டன. எதிர்க்கட்சிகள் முழக்கத்திற்கிடையே ஜனாதிபதி திரௌபதி முர்மு தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல் இல்லா நிர்வாக அமைப்பு
ஊழல் இல்லா நிர்வாக அமைப்பை உருவாக்குவதில் அரசு வெற்றி கண்டுவருகிறது. செலவிடப்படும் ஒவ்வொரு தொகையும் நாட்டின் வளர்ச்சிக்காகவே செலவிடப்படுகிறது. நீர், நிலம் உள்ளிட்ட பல துறைகளில் இந்தியா இன்று வேகமாக முன்னேறி வருவது உலகளாவிய அளவில் விவாதிக்கப்படும் விஷயமாக மாறியுள்ளது.
பிரதம மந்திரி கிராமப்புற சாலைகள் திட்டத்தின் மூலம் மட்டும் 18 ஆயிரம் கிலோமீட்டருக்கு புதிதாக ஊரக பகுதிகளில் சாலைகள் ஓராண்டில் மட்டும் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் உணவு உற்பத்தி 350 மில்லியன் டன்களை தாண்டி சாதனை படைத்துள்ளது. உலகின் மூன்றாவது பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா மாறியுள்ளது.
செல்போன் உற்பத்தியில் உலகில் 2 ஆம் இடம்
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீன் உற்பத்தி நாடாகவும் இந்தியா மாறியுள்ளது. நீல பொருளாதாரத்தில் இந்தியாவின் வெற்றியை இது பிரதிபலிக்கிறது. பால் உற்பத்தியிலும் இந்தியா சர்வதேச அளவில் முன்னிலை வகிக்கிறது. செல்போன் உற்பத்தியிலும் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடாக இந்தியா மாறியுள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசு திட்டங்களின் மூலம் காப்பீடு கிடைத்துள்ளது.
ஏஐ தவறான பயன்பாடு
24 ஆயிரம் கோடி அளவுக்கு இந்த திட்டத்தின் கீழ் தொகை செட்டில் செய்யப்பட்டுள்ளது. ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாட்டால் ஏற்படும் அபாயங்களை கருத்தில் கொண்டு, இந்த விஷயத்தில் நாம் தீவிரமாக இருக்க வேண்டியது அவசியம்.
அரைகுறை தகவல்கள், தவறான தகவல்கள் மற்றும் போலி உள்ளடக்கங்கள் ஜனநாயகம், சமூக ஒற்றுமை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கைக்கு பெரிய அச்சுறுத்தல்களாக மாறி வருகின்றன. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்தியாவின் வீரத்தை வெளிப்படுத்தியது. எந்தவொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் உறுதியான, தீர்மானமான பதிலடி கொடுக்கப்படும் என்ற தெளிவான செய்தியை அரசு வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications