டெல்லி பூகம்பம்.. திடீரென கேட்ட "அந்த" அதிபயங்கர சத்தம்! புரியாமல் குழம்பிய மக்கள்.. என்ன காரணம்?
டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் இதனால் அலறி சாலைகளில் முகாமிட்ட போது திடீரென அங்கு மிகவும் சக்திவாய்ந்த பலத்த சத்தம் கேட்டது.. இது மக்களை மேலும் அச்சுறுத்துவதாகவே இருந்தது. இந்த பலத்த சத்தம் ஏற்பட என்ன காரணம்.. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இன்று அதிகாலை டெல்லியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4ஆக இந்த நிலநடுக்கம் பதிவான நிலையில், இதனால் அங்குள்ள பல கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்கள் அச்சத்தில் சாலைகளுக்கு ஓடி வந்தனர்.

நிலநடுக்கம்
டெல்லி மட்டுமின்றி அருகே உள்ள பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.. இந்த பூகம்பம் சுமார் 5 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாகத் தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. நல்வாய்ப்பாக நிலநடுக்கம் லேசாக இருந்ததால் இதனால் உயிரிழப்புகளோ, காயங்களோ எதுவும் ஏற்படவில்லை. அதேநேரம் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது சில நொடிகள் மிகவும் பலத்த சத்தம் கேட்டுள்ளது.
டெல்லியில் வசித்த பெரும்பாலான மக்களுக்கு இந்த பலத்த சத்தம் கேட்டுள்ளது. திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் ஏற்கனவே பயத்தில் இருந்த மக்களுக்கு இந்த சத்தமும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவே இருந்தது. ஏதாவது மோசமான சம்பவம் ஏற்பட்டு இருக்குமோ என்றே மக்கள் பலரும் கருதினர். ஆனால், நல்வாய்ப்பாக அதுபோல எதுவும் நடக்கவில்லை. அப்போது அந்த பயங்கரமான சத்தம் என்ன என்ற சந்தேகம் வரும். அதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
பலத்த சத்தம் ஏன்?
பூமிக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்படும் போது, அவை ஆழமாக ஏற்பட்டால் எந்தவொரு சத்தமும் கேட்காது. அதேநேரம் குறைந்த ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் பலத்த சத்தம் கேட்கும். ஆழமற்ற இடங்களில் பூகம்பம் ஏற்படும் போது ஹை-ப்ரீக்வன்சி அதிர்வுகளால் நிலம் அதிர்வுறும் என்றும் இதுவே பலத்த ஒலியை உருவாக்குவதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் குறிப்பிடுகிறது
அதாவது பூகம்பத்தின் போது செஸ்மிக் வேவ் உருவாகும் நிலையில், அது காற்றை அடைந்து சத்தமாக மாறுகிறது. நிலநடுக்கம் எவ்வளவுக்கு எவ்வளவு ஆழம் குறைவாக ஏற்படுகிறதோ.. அந்தளவுக்குச் சத்தம் அதிகமாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
டெல்லி நில அதிர்வு மண்டலம்
டெல்லி என்பது நில அதிர்வு மண்டலம் IVஇல் அமைந்துள்ளது. அதாவது இந்த மண்டலத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். அங்கு பொதுவாக 5-6 ரிக்டர் அளவிலும், சில நேரம் 7-8 அளவிலும் கூட பூகம்பம் ஏற்படலாம். இந்த நிலநடுக்க மண்டலம் என்பது எப்போதும் ஒரே இடத்தில் இருக்காது. டெக்டோனிக் தட்டுகளின் மூவ்மெண்ட்டை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிய நிலநடுக்கம்
மேலும், நிலநடுக்கம் என்பது பூமிக்கு அடியில் எங்கு வேண்டுமானாலும் ஏற்படும். அதில் பூமியின் ஆழமான பகுதியில் ஏற்படும் பூகம்பத்தால் சேதம் குறைவாகவே இருக்கும். அதேநேரம் பூமியின் மேற்பரப்பிற்கு அருகே ஏற்படும் நிலநடுக்கத்தால் பாதிப்பு அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகவே டெல்லியில் நிலநடுக்கம் ரிக்டரில் குறைவாக இருந்தாலும் கூட அது பெரிய பூகம்பத்தைப் போல உணரப்பட்டது. மேலும், இன்று நிலநடுக்கம் ஏற்பட்ட துவாலா குவான் பகுதியில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறிய அளவிலான நிலநடுக்கம் எப்போதும் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications